Published : 13 Apr 2022 08:14 AM
Last Updated : 13 Apr 2022 08:14 AM
புதுடெல்லி: இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஒருமாதத்துக்கு இறக்குமதி செய்யும்கச்சா எண்ணெய் அளவானது ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஒரு மதிய வேளைக்கு இறக்குமதி செய்யும் அளவைவிட குறைவானது என்று கடந்த திங்கள்கிழமை அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் தாக்குதலுக்கு எதிர்வினையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்தன. அமெரிக்கா ஒரு படி மேலே சென்று, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய தடை விதித்தது. சில ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யாது என்று கூறப்பட்டது.
இந்தச் சூழலில் ரஷ்யா சலுகை விலையில் கச்சா எண்ணெயை வழங்குவதாக அறிவித்தது. இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது.
இந்தியா நடுநிலை
ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவின் தலைமையில் ஐ.நா.வில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் நடுநிலை வகித்தது.
இதனால், இந்தியா மீது அமெரிக்கா அதிருப்தியில் இருந்தது. இந்நிலையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா தடை விதித்தபோதிலும், இந்தியா அதைப் பொருட்படுத்தாமல் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பட்டபோது அவர் கூறியதாவது:
நீங்கள் ரஷ்யாவிடமிருந்து யாரெல்லாம் எண்ணெய் இறக்குமதி செய்கிறார்கள் என்று உற்றுக்கவனித்தால் உங்களுக்கு உண்மைநிலவரம் பிடிபடும். இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஒரு மாதம் இறக்குமதி செய்யும் எண்ணெயை, ஐரோப்பிய நாடுகள் ஒரு மதியப் பொழுதிலே இறக்குமதி செய்து விடுகின்றன. ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடுஎன்ன என்பது பலமுறை சொல்லப்பட்டு விட்டது. இந்த மோதலுக்கு எதிரான நிலைப்பாட்டையே இந்தியா எடுத்துள்ளது. இந்த வன்முறை நிறுத்தப்படவே நாங்கள் விரும்பு கிறோம். அதற்காக என்ன வேண்டு மானாலும் செய்ய தயராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரி வித்தார்.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT