

மும்பை: ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் விரைவில் ஏற்படுத்தப்படும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை நேற்று வெளியிட்டு பேசுகையில் அவர் இத்தகவலை தெரிவித்தார்.
கடன் அட்டைகள் மூலம் நடைபெறும் மோசடிகளைத் தடுப்பதற்காக அனைத்து வங்கி களும் கடன் அட்டை இல்லாமல் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என்றும் இந்த வசதி அனைத்து வங்கிகளின் ஏடிஎம்களில் விரைவில் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிட்டார்.
தற்போது சில குறிப்பிட்ட வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்தின் பேரில் இந்த வசதிவங்கியுடன் இணைந்துள்ள ஏடிஎம்களில் அளிக்கப்படுகிறது. இனி அனைத்து வங்கி ஏடிஎம்களிலும் கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக அனைத்து ஏடிஎம்களும் யுபிஐ நெட்வொர்க்கை பயன்படுத்த அனுமதிக்கப்படும். இதனால் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டை ஸ்கிம்மிங் செய்து பணம் எடுப்பது, கார்டு நகல் எடுப்பது போன்ற மோசடிகள் தடுக்கப்படும்.
ஒருங்கிணைந்த பேமென்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) முறையின் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மை உறுதி செய்யப் பட்டு, பணப் பரிவர்த்தனை ஏடிஎம் மூலம் மேற்கொள்ளப்படும்.
இப்போது பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலமாக பில் கட்டணங்கள் செலுத்துவது அதிகரித்துள்ளது. இதன் மூலம் பலரும் பணம் செலுத்தும் வசதியைப் பயன்படுத்த ஏதுவாக வங்கி அல்லாத பிபிபிஎஸ்பிரிவுகளை அதிக எண்ணிக்கையில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இத்தகைய பரிவர்த்தனை பிரிவுகளைத் தொடங்குவதற்கான மூலதன வரம்பு ரூ.100 கோடியிலிருந்து ரூ.25 கோடியாகக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கமான முறையில் கட்டணங்களை செலுத்தலாம். அனைத்துவகையான கட்டண சேவைகளையும் இதன் மூலம் பெற வழியேற்படும். பில் கட்டணம் செலுத்தும்எண்ணிக்கை அதிகரித்துள்ள அளவுக்கு பேமென்ட் செயல் பிரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இதற்கான முதலீட்டு தொகை குறைக்கப்பட்டுள்ளதால் இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆர்பிஐ எதிர்பார்க்கிறது.
ரெபோ வட்டி மாற்றமில்லை
ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட நிதிக் கொள்கையில் ரெபோ வட்டி விகிதத்தில் எவ்வித மாறுதலும் செய்யப்படவில்லை. இதனால் முந்தைய 4 சதவீத நிலையே தொடரும். இதேபோல ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணங்களாலும், பொருள்களின் தேவை அதிகரித்து வருவதாலும் பணவீக்கம் அதிகரித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நடைபெறும் முதலாவது நிதிக் கொள்கை கூட்டம் இதுவாகும். இந்த நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதர வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ கணித்துள்ளது. முன்னர் வளர்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. தற்போது வளர்ச்சி விகிதம் குறைவாக கணிக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் 5.7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 6.3 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 5 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 5.4 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 5.1 சதவீதமாக வும் இருக்கும் என கணித்துள்ளது.
இதேபோல முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 16.2 சதவீதமாகவும், 2-வது காலாண்டில் 6.2 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 4.1 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 4 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
பணவீக்கம் உயரும் என்பதால் அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
-பிடிஐ