Last Updated : 07 Apr, 2022 12:55 AM

 

Published : 07 Apr 2022 12:55 AM
Last Updated : 07 Apr 2022 12:55 AM

பொம்மை உற்பத்தியாளர் பிஎஸ்ஐ சான்று பெறும் வழி என்ன? - மத்திய அமைச்சர் பதில்

புதுடெல்லி: பொம்மை உற்பத்தியாளர் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் (பிஎஸ்ஐ சான்றிதழ்) பெற வழி என்ன? என திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார் சௌபே பதில் அளித்தார்.

மக்களவையின் திமுக அவைக்குழுவின் துணைத்தலைவரான கனிமொழி இதுதொடர்பாக எழுப்பியக் கேள்வியில், ‘பொம்மை உற்பத்தியாளர்களுக்கு, பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் சான்றிதழ் குறிப்பிட்ட அளவுதான் வழங்கப்படுகிறது என்பது குறித்து அரசு அறிந்துள்ளதா?

அப்படி என்றால் பொம்மை உற்பத்தியாளர்களுக்கு இந்த தரச் சான்றிதழ் வழங்குவதில் வரம்புகள் நிர்ணயிக்கப்படக் காரணம் என்ன? இந்த பிஎஸ்ஐ தரச்சான்றுகளை சிறு குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் அனைவருக்கும் படிப்படியாக வழங்குவதற்கு அரசு பரிசீலித்து வருகிறதா?’ எனக் கேட்டார்.

இந்தக் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதிலளிக்கையில், ’பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்ட் தரச்சான்று கடந்த மார்ச் 28 ஆம் தேதி நிலவரப்படி 630 உள்நாட்டு பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 661 பொம்மை உற்பத்தியாளர்களுக்கு இந்த தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 630 தரச்சன்றிதழ் அதாவது 95 சதவிகிதம் சிறு குறு நடுத்தர பொம்மை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி பொம்மைகளின் பாதுகாப்புக்காக, 2020 ஜனவரி 1 முதல் பிஎஸ்ஐ தரச்சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தரக்கட்டுப்பாடு ஆணை 2020, பிஐஎஸ் சட்டம் 2016 பிரிவு 16 இன் படி தொழில் மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு பொம்மைகளின் பாதுகாப்புக்கான இந்திய தர நிலைகளுக்கு இணங்குவது கட்டாயமாகும். இந்தியாவில் பொம்மை உற்பத்திக்கான ஐஎஸ்ஐ சான்றிதழை பெறுவதற்கு பீரோ ஆஃப் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸ் பெறுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத பொம்மைகளை உற்பத்தி செய்யவோ இறக்குமதி செய்யவோ விநியோகிக்கவோ விற்கவோ சேமித்து வைக்கவோ காட்சிப்படுத்தவோ முடியாது.

இவ்வாறு அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x