

புதுடெல்லி: மார்ச் மாதத்தில் வாகனங்களின் விற்பனை நிலவரம் வெளியாகியுள்ள நிலையில் இருசக்கர வாகனம், கார்கள் உட்பட பயணிகள் வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. இதற்கு பெட்ரோல், டீசல் விலையுர்வு காரணம் என கருதப்படுகிறது.
ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) இந்தியாவில் மார்ச் மாதத்திற்கான விற்பனை தரவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி பயணிகள் வாகனம் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடுகையில் இந்த மார்ச் மாதத்தில் குறைந்துள்ளது.
2021- மார்ச் மாத புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது, 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான மொத்த சில்லறை விற்பனை மூன்று சதவீதம் குறைந்துள்ளது. மேலும் 2020 மார்ச் மாதத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது 30% குறைந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், சில்லறை விற்பனை முன்று சக்கர வாகனம் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை உயர்வு கண்டன, இரு சக்கர வாகனம், பயணிகள் வாகனம் மற்றும் டிராக்டர் பிரிவில் விற்பனை சரிந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் உள்நாட்டு பயணிகள் வாகன சில்லறை விற்பனை 4.87 சதவீதம் குறைந்துள்து. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தகவல்படி, கடந்த 2022-ம் ஆண்டில் 2,71,358 யூனிட்டுகளாக இருந்த இதன் விற்பனை மார்ச் 2021இல் 2,85,240 அலகுகளாக இருந்தது.
இரு சக்கர வாகனங்கள் விற்பனை 4.02 சதவீதம் குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டு மார்ச்சில் 11,57,681 ஆக உள்ள நிலையில் முந்தைய ஆண்டு மார்ச்சில் விற்பனை 12,06,191 ஆக இருந்தது. கிராமப்புற பொருளாதார நெருக்கடியினால் இரு சக்கர வாகனப் பிரிவு ஏற்கெனவே செயல்படாத நிலையில் இருந்தது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் வாகன உரிமைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக இது மேலும் குறைந்துள்ளதாக ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. .
இரு சக்கர வாகனங்கள் விற்பனை சரிவுக்கு எரிபொருள் விலை உயர்வு, அதிகரித்து வரும் உரிமைச் செலவு, விநியோகச் சங்கிலி சிக்கல்கள், சில நடைமுறை பிரச்சினைகள் போன்றவை முக்கிய காரணம் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது இந்திய வாகனத் துறைக்கு சவால்களாக இருக்கின்றன எனவும் கூறியுள்ளது. குறிப்பாக பெட்ரோல் - டீசல் செலவு காரணமாக இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.