

ஆன்லைன் மூலம் உணவு விநியோக பணிகளை கவனித்து வரும் நிறுவனங்களான சொமேட்டோ மற்றும் ஸ்விகி ஆகிய நிறுவனங்கள் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது இந்தியப் போட்டியியல் ஆணையம் (சிசிஐ). நாட்டின் தேசிய உணவக சங்கம் (என்.ஆர்.ஏ.ஐ) இந்த தளங்களின் நடுநிலைமை மற்றும் நியாயமற்ற வணிக செயல்பாடு தொடர்பாக தங்களது சங்கடங்களை புகார் மூலம் தெரிவித்துள்ளது. அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொள்ள சிசிஐ உத்தரவு பிறப்பித்துள்ளது.
சொமேட்டோ மற்றும் ஸ்விகி மீது போட்டியியல் சட்டப் பிரிவு விதிகள் 3(1) மற்றும் 3(4) மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், அது தொடர்பாக அந்நிறுவனங்களின் வணிக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது சிசிஐ. ஏப்ரல் 4-ஆம் தேதி (நேற்று) குறிப்பிடப்பட்டுள்ள அந்த உத்தரவில் 60 நாட்களில் விசாரணையை மேற்கொண்டு, அதன் அறிக்கையை சமர்ப்பிக்கவும் விசாரணைக் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது சிசிஐ.
குறிப்பாக போட்டியியல் விதிமுறைகளை மீறி அதிகப்படியான தள்ளுபடி, குறிப்பிட்ட சில உணவகங்களுடன பிரத்யேகமாக கூட்டு வைத்துள்ளது, தாமதமாக கட்டணங்களை கொடுப்பது, ஒரு சார்புடைய வகையிலான ஒப்பந்த விதிகள், அதிகப்படியான கமிஷன் வசூலிப்பது மாதிரியானவை இந்நிறுவனங்களின் மீது தேசிய உணவக சங்கம் வைத்துள்ள புகார்கள். இந்நிறுவனங்களால் தங்களது வணிகத்தில் பெருமளவு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
மேலும் சொமேட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனத்திற்கு சொந்தமான கிளவுட் கிச்சன் அல்லது தனியார் லேபிள் பிராண்டுகள் நேரடியாக அந்த தளங்களில் இடம்பெற்றுள்ளது குறித்தும் தங்களது புகாரில் தேசிய உணவக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போது அதன் அடிப்படையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரத்தில் தாமதமாக கட்டணங்களை கொடுப்பது மற்றும் அதிகப்படியான கமிஷன் வசூலிப்பது மாதிரியான குற்றச்சாட்டுகள் இந்த வழக்குக்கும், அதன் சூழலுக்கும் முகாந்திரமாக இல்லை எனவும் சிசிஐ தெரிவித்துள்ளது. சிசிஐ-யின் இந்த மேற்கோள் தேசிய உணவக சங்கத்திற்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஆன்லைன் தளங்களின் செயல்பாடு மற்றும் வணிக நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை போட்டியை சிதைக்கும் எனவும் சிசிஐ தெரிவித்துள்ளது. அதனால் ஆன்லைன் தளங்கள், தங்கள் தலங்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் இடையேயான வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த பரிந்துரைத்துள்ளது சிசிஐ. முன்னதாக இது குறித்து சிசிஐ தலைவர் அசோக் குமார் குப்தா, இ-காமர்ஸ் நிறுவனங்கள் அதன் சில செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த வேண்டும் என சொல்லி இருந்தார்.
இது தொடர்பாக சொமேட்டோ மற்றும் ஸ்விகி நிறுவனங்கள் இன்னும் முழு விளக்கம் அளிக்கவில்லை.