

புதுடெல்லி: வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிப்பது என எதிர்வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று பரவிய செய்தி போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் மத்திய அரசின் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று காட்டுத் தீ போல பரவி வருகிறது. விரைவில் நடைபெற இருக்கும் மத்திய அரசின் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வீடுகள் மற்றும் கடைகளுக்கான வாடகைக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்படும் என்ற அந்தத் தகவலில் உண்மை எதுவும் இல்லை என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.
வரவிருக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதி அமைச்சகம் அத்தகைய முன்முடிவு எதையும் எடுக்கும் திட்டமில்லை என்றும், தயவுசெய்து இதுபோன்ற பதிவுகளை பகிர்வதைத் தவிர்க்கவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, அவ்வாறு பரவிய தகவல்களால், வீட்டு வாடகைக்குப் போடப்படும் ஜிஎஸ்டி கூட, வாடகைதாரர்களின் தலையில்தான் இறுதியில் வந்துவிழும் என்பன போன்ற கவலையுடன் கூடிய பதிவுகள் பலவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.