

இந்தியாவின் முதல் நிலை செல்வந்தர் யார் என்பதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அதானி குழும நிறுவனர் கௌதம் அதானி என இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதில் அவ்வப்போது ஒருவரை ஒருவர் முந்துவதும் உண்டு.
பெட்ரோ கெமிக்கல், எண்ணெய் மற்றும் எரிவாயு, டெலிகாம் மற்றும் ரீடெயில் மாதிரியான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் முகேஷ் அம்பானி. மறுபக்கம் கௌதம் அதானியோ துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். உலக அளவில் முன்னணி செல்வந்தர்களின் சொத்து விவரம் குறித்த தகவல்களை ரெகுலராக சில நிறுவனங்கள் அப்டேட் கொடுப்பதுண்டு.
அந்த நிறுவனங்கள் கொடுத்துள்ள அண்மைய தகவலின்படி, முகேஷ் அம்பானியை முந்தியுள்ளார் கௌதம் அதானி எனத் தெரிகிறது. இன்றைய தேதியில் (04.04.22) அவரது சொத்து மதிப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அதானி அதானி சென்டிபில்லியனர்ஸ் கிளப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மூன்று இலக்கங்களில் சொத்து மதிப்பு கொண்ட உலகப் பணக்காரர்கள்.
இதன் மூலம் உலகின் டாப் 10 பணக்காரர்களில் பத்தாவது இடத்தை பிடித்துள்ளார் அதானி. 11-வது இடத்தில் முகேஷ் அம்பானி, 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பை கொண்டுள்ளார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருவரும் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.