

மும்பை: ஹெச்டிஎப்சி வங்கி - ஹெச்டிஎப்சி நிறுவனம் இணைப்பு குறித்த ஒரு பெரிய முடிவு எடுக்கும் முன்பாக இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் கழித்தேன் என ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் தெரிவித்துள்ளார்.
ஹெச்டிஎப்சி நிறுவனத்தையும் அதன் துணை நிறுவனங்களையும் ஹெச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த இணைப்பு 2024 நிதியாண்டின் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்டிஎப்சியின் 25 பங்குகளுக்கு ஹெச்டிஎப்சி வங்கியின் 42 பங்குகள் அடிப்படையில் இணைக்கப்படுகிறது. இதுகுறித்து ஹெச்டிஎப்சி தலைவர் தீபக் பரேக் கூறியதாவது:
இதுபோன்ற ஒரு பெரிய முடிவு எடுக்கும் முன்பாக இரண்டு இரவுகள் தூக்கமில்லாமல் கழித்தேன். 45 வருடமாக வீட்டு நிதி நிறுவனம் 90 லட்சம் வீடுகளுக்கு கடன் வழங்கியுள்ளோம்.
ஆனால் எங்களுக்கு என ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. நாங்கள் அதை எங்கள் சொந்த குடும்பத்திலும் எங்கள் சொந்த வங்கியிலும் கண்டுபிடித்துள்ளோம். இது மகிழ்ச்சியானது தான்.
ஆர்இஆர்ஏ அமலாக்கம், வீட்டுவசதித் துறைக்கான உள்கட்டமைப்பு நிலை, அனைவருக்கும் மலிவு விலையில் வீடுகள் போன்ற அரசின் முயற்சிகள் போன்றவற்றின் காரணமாக வீட்டு நிதி வணிகம் மிக வேகமாக வளரத் தயாராக உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.
வீட்டு நிதி வணிகம் மேன்மேலும் வளர்ச்சி அடையும். எங்கள் நிறுவனத்தின் இந்த இணைப்பு கடன் வளர்ச்சியின் வேகத்தை கூடுதலாக்கும். இந்த இணைப்பிற்குப் பிறகு, ஹெச்டிஎப்சி வங்கியானது 100 சதவிகிதம் பொதுப் பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்.
ஹெச்டிஎப்சி லிமிடெட்டின் தற்போதைய பங்குதாரர்கள் ஹெச்டிஎப்சி வங்கியின் 41 சதவிகிதத்தை வைத்திருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.