

திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்வுகாரணமாக திருப்பூர் மாவட்டம்அனுப்பர்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு பாத்திர உற்பத்தி பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர், செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி ஜாப் ஆர்டர் செய்வோர் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
பாத்திர உற்பத்திக்கென பிரத்யேக இயந்திரங்கள் வந்தபோதிலும், அனுப்பர்பாளையத்தில் 80 சதவீத பாத்திர உற்பத்தி கை வேலைப்பாடுகள் மூலமாகவே மேற்கொள்ளப்படுகின்றன. இதுவே, மக்கள் மத்தியில் அனுப்பர்பாளையம் பாத்திரங்கள் நிலைத்து நிற்க காரணம் எனலாம்.
இச்சூழலில் அனுப்பர்பாளையம் பகுதிகளில் ஜாப் ஆர்டர்கள் எடுத்து பாத்திர உற்பத்தியில் ஈடுபடும் சிறு, குறு பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
அனுப்பர்பாளையத்தில் இருந்து அண்டா, தவலை, பானை, குடம்,டேக்ஸா, பராத்து, சொம்பு, வானாத்து சட்டி உட்பட பலவகையான எவர்சில்வர் பாத்திரங்களை உற்பத்தி செய்து வருகிறோம். எங்களது பாத்திரங்களில் பூ வரைதல், உருவங்களைப் பொறித்தல் போன்ற வேலைப்பாடுகள் இருக்காது. பெரு நிறுவனங்களில் இதற்கென பொறியாளர்களை வைத்து இயந்திரங்கள் மூலமாகவேலைப்பாடுகளை மேற்கொள்கின்றனர்.
பிற ஊர்களில் உற்பத்தி செய்யப்படும் பாத்திரங்களைவிட, அனுப்பர்பாளையம் பாத்திரங்கள் எடை அதிகமானவை. அதனால் இவ்வகை பாத்திரங்களுக்கு ஆயுள் அதிகம். எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்க தேவையான தகட்டின் விலை கிலோவுக்கு ரூ.35 வரையும், பித்தளை, செம்பு தகடுகளின் விலை கிலோவுக்கு ரூ.200 வரையும், பாத்திர உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டரின் விலை ரூ.30 வரையும் அதிகரித்துள்ளது. இதனால் சிறு, குறு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் கணக்கில் வைத்து, ஆர்டர் எடுத்தபிறகு மீண்டும் விலை உயர்ந்துவிடுகிறது. இதனால் ஆர்டர் கிடைத்தாலும் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால் அனுப்பர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு பாத்திர உற்பத்தி பட்டறைகள் தற்போதுமூடப்பட்டுள்ளன. இத்தொழிலை நம்பியிருந்த பலரும் மாற்றுத்தொழிலை தேடி வேறுமாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். இவ்வாறுஅவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எவர்சில்வர் பாத்திர உற்பத்தியாளர் சங்க பொருளாளர் ராஜேந்திரன் கூறும்போது, ‘‘மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாத்திர உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்,’’ என்றார்.