

புதுடெல்லி: 3000 மின்சாரக் கார்களை வாங்குவதற்கு ப்ளூஸ்மார்ட் மொபிலிட்டி திட்டத்துக்கு ரூ.268 கோடியை இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை கடன் வழங்குகிறது.
டெல்லி-தேசிய தலைநகர் பகுதியில் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மிகப்பெரிய கடன் வழங்குநரான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐரெடா), முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் 3,000 கார்களை வாங்குவதற்கு ப்ளூஸ்மார்ட் மொபிலிட்டிக்கு ரூ 267.67 கோடி கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய மூலதனத்தைப் பயன்படுத்தி 3,000 மின்சார கார்களை வாங்கும் புளூஸ்மார்ட் மொபிலிட்டி, அதன் செயல்பாடுகளை இதன் மூலம் விரிவாக்கும். கடனில் இருந்து முதல் தவணையாக ரூ 35.70 கோடியை நிறுவனத்திற்கு ஐரெடா வழங்கியுள்ளது.
இதுகுறித்து பேசிய ஐரெடா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரதீப் குமார் தாஸ் கூறியதாவது:
"இந்தியாவில் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மிகப்பெரிய வளர்ச்சி சாத்தியம் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் தேசிய தலைநகர் பகுதியில் ப்ளூஸ்மார்ட் சேவைகளை வழங்கி வருகிறது.
இந்தியாவை தூய்மையான மற்றும் பசுமையான நாடாக மாற்றுவதற்கான எங்களின் முதல் பெரிய முதலீடு இதுவாகும். நாட்டில் உள்ள தூய்மையான ஆதாரங்களை நோக்கி போக்குவரத்தை நகர்த்துவதற்கான முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு மின்சார வாகன திட்டங்களுக்கு நிதியளிப்பதை ஐரெடா எதிர்நோக்குகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.