

புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் எங்களை அழிக்க நினைத்தது. அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. இது கசப்பான நீண்ட காலமாக தொடரும் சட்ட ரீதியான போராட்டம் என்று பியூச்சர் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல்4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட் டுள்ளது.
அமேசான் இன்கார்ப்பரேஷன், பியூச்சர் ரீடெய்ல் லிமிடெட் (எப்ஆர்எல்) ஆகிய நிறுவனங்கள் தங்களது பிரச்சினையை நீதிமன்றத்துக்கு வெளியே சுமுகமாக தீர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் அதில் தீர்வு காண முடியாததால் மீண்டும் இப்பிரச்சினை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.
இதனிடையே கடந்த மாதம் பியூச்சர் குழுமத்துக்குச் சொந்தமான விற்பனை நிலையங்களில் பலவற்றை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. ரூ.4,800 கோடி வாடகை நிலுவைக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
‘‘இப்போதைய சூழலில் எங்களுடன் எந்த நிறுவனமும் வர்த்தகம் புரிய முன்வரவில்லை. வாடகை நிலுவை உள்ள சூழலில் எந்த உரிமையாளரும் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பத்தான் செய்வர். வாடகை தராத சூழலில் 835 விற்பனையகங்களை ரிலையன்ஸ் கைப்பற்றியது.
இப்போது எஞ்சியிருப்பது 374 விற்பனையகங்கள் மட்டுமே. இப்போதைய நிலையில் நாங்கள் நீதிமன்றத்தை மட்டுமே நம்பியுள்ளோம்’’ என்று பியூச்சர் குழுமம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
2019-ம் ஆண்டு பியூச்சர் குழுமத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தில் அந்நிறுவனம் தனது சங்கிலித் தொடர் நிறுவன சொத்துகளை வேறு எவருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதில் குறிப்பிட்ட பிரிவினருக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதில் ரிலையன்ஸ் நிறுவனமும் அடங்கும். இத்தகைய சூழலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு நிறுவனத்தை விற்கும் முயற்சியானது விதிமீறல் நடவடிக்கையே என்று அமேசான் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
இப்போது பியூச்சர் குழும சொத்துளை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றிய நடவடிக்கையை எதிர்க்காததும் தவறுதான் என குறிப்பிட்டது.
பியூச்சர் நிறுவன ரீடெய்ல் சொத்துகளை பரிமாற்றம் செய்த நடவடிக்கையானது ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள்என்பதைப் போல் உள்ளது. 800-க்கும் மேற்பட்ட விற்பனையகங்களை எவ்விதஎதிர்ப்பும் காட்டாமல் விட்டுவிட்டது வியப்பளிப்பதாக உள்ளது என அமேசான் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினர்.
‘‘வாடகை பணம் கட்ட முடியாத சூழலில், வெளியிலிருந்து பணம் புரட்ட முடியாத நிலையில் இதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என பியூச்சர் குழுமம் நீதிமன்றத்திடம் பதில் அளித்தது. வாராக் கடன் பிரிவின் கீழ் வந்ததால் வங்கிகளிடமிருந்து கடன் பெற முடியவில்லை. வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுவிட்டன என்றும் குறிப்பிட்டது.
வாடகை பணம் கொடுக்க முடியவில்லை என்பதால் விற்பனையகங்களை ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதை தடுக்கவில்லை என்பது ஏற்புடையதாக இல்லை. இந்த வழக்கில் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கும் வரை, பியூச்சர் குழும சொத்துகளை வேறு எந்த நிறுவனமும் கைப்பற்ற நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது’’என்று அமேசான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.