

மும்பை: கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்தால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 200 சதவீதம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவிலும் கிரிப்டோகரன்சி வர்த்தகம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்து காரணமாக தனியார் கிரிப்டோகரன்சிகளுக்குத் தடை அறிவிக்கவும், ரிசர்வ் வங்கியின் பிரத்யேக கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்த சட்டம் கொண்டு வரவும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அத்துடன் கிரிப்ட்டோகரன்சியை ஒழுங்குப்படுத்தும் சில அறிவிப்புகள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றன.
மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்து. அதுமட்டுமல்லாமல் கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி கிரிப்டோகரன்சி உள்ளிட்ட மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகள் மூலம் ஈட்டப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரிவிதிக்கும் நடைமுறை இன்று முதல் (ஏப்ரல்1ம் தேதி) நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த வரி என்பது வருமான வரி சட்டத்தின் எந்த பிரிவின் கீழும் சலுகை பெற வாய்ப்பு கிடையாது.
அதாவது மற்ற வருமானங்களில் கிடைக்கப் பெறும் சலுகையை பயன்படுத்தி இதில் பெறப்படும் வருமானத்துக்கு வரி விலக்கு பெற முடியாது. கிரிப்ட்டோகரன்சியை பரிமாற்றம் செய்வதற்கும் 1 சதவீதம் வரி விதிக்கப்படும் நடைமுறை ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
வரி ஏய்ப்பு செய்தால் ஆறு மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகை அதிகமாக இருந்தால் அபராதமும் விதிக்கப்படும். குற்றத்தின் தன்மை, அளவைப் பொறுத்து, அபராதம் 200 சதவிகிதம் வரை கூட விதிக்கப்பட வாய்ப்புண்டு.
ஆராய்ச்சி நிறுவனமான டிரிபிள் ஏ கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 10 கோடிக்கும் அதிகமான கிரிப்டோ சொத்து வைத்திருப்பவர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள் தொகையில் இது 7.3 சதவீதம் ஆகும். இந்தியாவில் விதிக்கப்படும் வரி காரணமாக கிரிப்டோ சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை எதிர்காலத்தில் குறையக்கூடும் எனவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரிப்டோ ‘மைனிங்’ தொழிலாளர்கள் மற்றும் கிரிப்டோ அமைப்பை மேம்படுத்துவதற்கும், இயக்குவதற்கும் அதிக தொகையைச் செலவிடக்கூடிய சூழல் இருந்தாலும் வரி சலுகை வழங்கப்போவதில்லை என மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது.
ஆனால் கிரிப்டோ மைனிங்கிற்குத் தேவைப்படும் உபகரணங்கள் விலை அதிகம் என்பதால் அரசின் அறிவிப்பு கடும் விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.