

சென்னை: இந்தியப் பொருளாதாரம் மீண்டு எழத் தொடங்கி உள்ளது. நீடித்த நிலையான வளர்ச்சிக்கான காலம் தொடங்கி விட்டது. இதற்கான அறிகுறிகள் பரவலாகத் தெரிகின்றன. உக்ரைன் போர் பின்னணி, அந்நிய முதலீடுகளின் வரவு, உள்நாட்டு நிலவரம் ஆகிய மூன்று பிரிவுகளில் இது அடங்கும்.
உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலால் உலக நாடுகள் பல இன்னலுக்கு உள்ளாகும். ஏற்கெனவே ஏராளமான உயிரிழப்புகளை, லட்சக்கணக்கான அகதிகளை ஏற்படுத்தியுள்ள இப்போரால் உலகப் பொருளாதாரம் பெரிய சவாலைச் சந்திக்க வேண்டி வரும்.
ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மிகவும் சாமர்த்தியமாகக் காய் நகர்த்துகிறது. இருதரப்புக்கும் பொதுவான சமாதானத் தூதுவராக இருக்கும் நிலையை விட்டுக் கொடுக்காது மிகவும் எச்சரிக்கை, பொறுப்புணர்வுடன் நடந்து கொள்கிறது.
உக்ரைன், கோதுமை உற்பத்தி, ஏற்றுமதிக்குப் பெயர் பெற்ற நாடு. போரின் காரணமாக கோதுமை வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்படும்; இதனால் இந்திய கோதுமைக்கு தேவை அதிகரிக்கும், நமது ஏற்றுமதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதில் எண்ணெய் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. (இந்த நடவடிக்கை எந்த விதத்திலும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை மீறுவதாக இல்லை என்கிறது அமெரிக்கா) இந்தியாவின் நடவடிக்கை பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளுக்கு இது ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும். ஓரளவுக்கு மேல் தம்மால் உற்பத்தியைக் குறைத்து, விலையை உயர்த்த இயலாது என்கிற உண்மையைப் புரிய வைக்கும். ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் மூலம் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்; விலைவாசி உயர்வு, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை பெரிதும் உதவும்.
அமெரிக்கா எதிர்க்கவில்லை
இந்தியாவின் கொள்கை மற்றும் அணுகுமுறை குறித்து ‘குவாட்’ அமைப்பின் எதிர்வினை என்ன..? அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; ஆஸ்திரேலியாவும் மனநிறைவு தெரிவித்து இருக்கிறது. ஜப்பான் நம்முடன் உறவை வலுப்படுத்தி இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 3.2 லட்சம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் உடன்பட்டிருக்கிறது.
ஆசிய மண்டலத்தின் இரு பெரும் அரசுகள் இணைந்து பயணிப்பது மிகுந்த அர்த்தம் பொதிந்தது ஆகும். சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு இது புதிய தெம்பைக் கொடுக்கும். நமக்கும் பல முனைகளில் நல்ல பலனைத் தரும்.
உக்ரைன் நாட்டில் படித்து வந்த மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரப்பட்டு இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் எந்த நாட்டுக்குள்ளும் இந்திய அரசு நுழைந்து தமது குடிமக்களைக் காப்பாற்றிக் கொண்டு வர முடியும் என்கிற நிலை சர்வதேச அரங்கில் இந்தியாவை உயர்த்திக் காட்டுகிறது.
அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஏதுவாக இந்தியா ரூ.7,500 கோடி நிதியுதவி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன்மூலம் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. இந்திய – இலங்கை உறவு வலுப்படுவதன் மூலம் இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாகி இருக்கின்றன.
ரஷ்யா – உக்ரைன் போர் விளைவாக உலகின் மூன்று பெரிய நாடுகளையும் விட்டு விலகி நிற்கவே பெரும்பாலான நாடுகள் விரும்புகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுக்கு எதிராக நிற்கும் ஐரோப்பிய நாடுகள் கூட அமெரிக்காவை முழுவதுமாக ஏற்கத் தயாராக இல்லை. சீனாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்திக் கொள்வதிலும் ஆர்வம் காட்டவில்லை. இவர்களுக்கு ஏற்ற, தொழில் வர்த்தக மேம்பாட்டுக்கான சுமுகமான சேர்விடமாக இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா மீது நம்பிக்கை
பிற நாட்டு அரசுகளின் பார்வையில் இந்தியா மிகவும் நம்புதற்குரிய நாடாக, புதிய தொழில் முனைவுகளுக்கு ஆதரவுதரும் இடமாக, வளர்ந்து வரும்பொருளாதாரமாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளை, இந்தியாவை மையமாகக் கொண்டு விரிவுபடுத்த பல நாட்டு அரசுகளும் விழைகின்றன. இவையெல்லாம் கடந்த சில வாரங்களில் இந்தியப் பொருளாதாரத்தின் மீது நேர்மறையான நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
பல்வேறு நாடுகளில் உள்ள அரசுகள் இந்தியாவுக்கு நீட்டும் நேசக் கரம், அங்கே வேலை தேடிச் செல்லும், ஏற்கெனவே அங்கே வேலையில் இருக்கும் நமது இளைஞர்களுக்கு மேலும் சாதகமான சூழலை ஏற்படுத்தும். இணக்கமான நல்லுறவுக்கு மிஞ்சிய வேலைவாய்ப்பு ஊக்குவிப்புச் செய்தி ஏதுமில்லை. எவ்விதப் பதற்றமும் இன்றி உலகம் எங்கும் சுதந்திரமாக இந்திய இளைஞர்கள் பணிக்குச் செல்லலாம்; தமது திறமையால் எந்த உயரத்தையும் எட்டலாம் என்கிற நிலைமை உறுதியாகத் தக்க வைக்கப்பட்டுள்ளது.