Published : 30 Mar 2022 10:09 PM
Last Updated : 30 Mar 2022 10:09 PM

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ரூ 6,062.45 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறன் மேம்பாட்டிற்கு ரூ.6,062.45 கோடி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உலக வங்கியின் உதவியுடன் “சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்” திட்டத்திற்கு 808 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூ.6,062.45 கோடி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த புதிய திட்டம் 2022-23 ம் நிதியாண்டில் தொடங்கும்.

திட்டத்திற்கான மொத்த செலவு ரூ 6,062.45 கோடி அல்லது 808 மில்லியன் அமெரிக்க டாலர். இதில் ரூ.3750 கோடி அல்லது 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடனாக பெறப்பட்டு, மீதமுள்ள ரூ 2312.45 கோடி அல்லது 308 மில்லியன் அமெரிக்க டாலர் இந்திய அரசால் நிதியளிக்கப்படும்.

"சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல்" என்பது உலக வங்கியின் உதவியுடனான மத்தியத் துறைத் திட்டமாகும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளை இது ஆதரிக்கிறது. சந்தை மற்றும் கடனுக்கான அணுகலை மேம்படுத்துதல், மத்தியிலும் மாநிலத்திலும் அமைப்புகள் மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்துதல், மத்திய-மாநில இணைப்புகள் மற்றும் கூட்டுகளை மேம்படுத்துதல், தாமதமான பணம் செலுத்துதல் குறித்த சிக்கல்களை களைதல் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பசுமைப்படுத்துதல் போன்றவற்றை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் திறனை தேசிய அளவில் கட்டியெழுப்புவதுடன், மாநிலங்களில் செயல்படுத்தும் திறன் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பரப்பை அதிகரிக்க இத்திட்டம் முயற்சிக்கும்.

தற்போதுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் திட்டங்களின் தாக்கத்தை இத்திட்டம் மேம்படுத்துவதன் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறையில் பொதுவான மற்றும் கோவிட் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும். குறிப்பாக, போட்டித்திறன், திறன் மேம்பாடு, தர செறிவூட்டல், தொழில்நுட்ப மேம்பாடு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு போன்றவற்றை இந்த திட்டம் மேம்படுத்தும்.

மாநிலங்களுடனான மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் வேலைவாய்ப்பு-உருவாக்குபவராகவும், சந்தை ஊக்குவிப்பாளராகவும், நிதி வசதியாளராகவும் இத்திட்டம் இருக்கும், மேலும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள் மற்றும் பசுமையாக்கும் முயற்சிகளுக்கு உறுதுணைபுரியும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x