Published : 26 Mar 2022 12:41 PM
Last Updated : 26 Mar 2022 12:41 PM

விலகினார் அனில் அம்பானி: சொந்த நிறுவனத்திலும் பதவி வகிக்கத் தடை; நெருக்கடிக்கு மேல் நெருக்கடி

அனில் அம்பானி: கோப்புப் படம்

மும்பை: செபி உத்தரவை ஏற்று ரிலையன்ஸ் பவர், ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான அனில் அம்பானி இன்று விலகியுள்ளார். உலகின் பெரும் நிறுவனங்களின் உரிமையாளராக இருந்த அவர் தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது.

முகேஷ் அம்பானியுடன் அனில் அம்பானி

அண்ணன் முகேஷ் அம்பானி புதிய, புதிய தொழில்களை தொடங்கி பணத்தை குவித்து வருகிறார். அதேசமயம், தம்பி அனில் தொடங்கிய ரிலையன்ஸ் பவர் நிறுவனம் முதல் பல தொழில்கள் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. சொத்துக்களை விற்று கடனை அடைக்க முயற்சி எடுத்து வருகிறார்.

எரிக்ஸன் நிறுவனத்துக்கு கடன் தொகையை செலுத்த வேண்டிய வழக்கில் உச்ச நீதிமன்ற கெடுவையடுத்து அனில் அம்பானி சிறை செல்வதை தவிர்க்க சகோதரர் முகேஷ் அம்பானி 260 கோடி ரூபாய் கொடுத்து தக்க தருணத்தில் உதவினார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை மற்றும் பாண்டு வெளியீடு உட்பட செக்யூரிட்டீஸ் சந்தையில் பங்கு பெற தடை விதித்து செபி உத்தரவிட்டது. அனில் அம்பானியின் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட அளவைவிடவும் தனது தவறான தகவல்களை தந்ததாக செபி தெரிவித்தது.

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து பணத்தை எடுத்து அதனை வேறு செலவுகளுக்கு பயன்படுத்திக் கொண்டதாலும் இந்த தடை விதிக்கப்பட்டது. அனில் அம்பானி உள்பட தடை விதிக்கப்பட்ட நபர்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பதவிகளில் தொடரக்கூடாது எனவும் செபி உத்தரவிட்டது.

இந்தநிலையில் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனங்களின் இயக்குநர் பதவியிலிருந்து அனில் அம்பானி இன்று விலகியுள்ளார்.

இதுகுறித்து ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மும்பை பங்கு சந்தையிடம் அளித்துள்ள அறிக்கையில் ‘‘பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த இடைக்கால உத்தரவின்படி, நிர்வாகம் சாராத இயக்குநர் பதவியை வகித்து வந்த அனில் அம்பானி, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலிருந்து விலகியுள்ளார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் கட்டுமானம், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு கூடுதல் இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு கூடுதல் இயக்குநராக ராகுல் சரின் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்களின் நிர்வாக குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x