

சென்னை: ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், பாரத ஸ்டேட் வங்கியுடன் (எஸ்பிஐ) கூட்டு சேர்ந்து வீட்டுக் கடன் வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலை வீடுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்க வழியேற்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீராம் குழும நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம், வீடுகளுக்குக் கடன் வழங்குவதில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
”குறைந்த விலை வீடுகளுக்கான தேவை மிகவும் அதிகமாக உள்ளது. இத்தேவையில் மிகச் சிறிய அளவுக்குத்தான் எங்கள் நிறுவனம் கடன் வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது எஸ்பிஐ-யுடன் ஒப்பந்தம் செய்ததன் மூலம் மேலும் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க வழியேற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்களது நிதி நிலை மேலும் வலுப்பெறும், எஸ்பிஐ-யுடன் இணைந்து செயல்படுவது இப்பிரிவில் மேலும் தங்களை வலுப்படுத்திக் கொள்ள உதவும்,’’ என்று ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ரவி சுப்ரமணியன் கூறினார்.
``ஸ்ரீராம் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் அதிக அளவிலான வாடிக்கையாளர்களை சென்றடைய முடியும். இந்த ஒப்பந்தம் மூலம் சிறிய வீடு வாங்க விரும்புவோருக்கும் கடன் வசதி கிடைக்க வழியேற்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்கை எட்ட இந்த ஒப்பந்தம் வழியேற்படுத்தியுள்ளது,’’ என்று எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறினார்.