

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் அந்நாட்டின் மீதுஅமெரிக்கா சர்வதேச தடை விதித்துள்ளது. இதனால் ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துள்ளன.
தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக தங்களது பிற வர்த்தகம் பாதிக்கும் என்பதால் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தவிர்த்துள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) 20 லட்சம் பீப்பாய்கச்சா எண்ணெய்யை வாங்கியுள்ளன.
இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ரஷியா வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தடை காரணமாக ரஷியாவின் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சில சலுகைகளை அளித்து கச்சா எண்ணெய் விநியோகத்தை தொடர்கிறது.
ஐரோப்பிய எரிசக்தி வர்த்தக நிறுவனமான விடோல் மூலம் ரஷிய உரால்ஸ் கச்சா எண்ணெய்யை ஐஓசி மற்றும் ஹெச்பிசிஎல் வாங்கியுள்ளன.
மங்களூர் சுத்திகரிப்பு மற்றும்பெட்ரோகெமிக்கல்ஸ் (எம்ஆர்பிஎல்) நிறுவனமும் இதே அளவு (10 லட்சம் பீப்பாய்) கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான டெண்டரை கோரியுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்துள்ள நிலையில்,சலுகை விலையில் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் இதை சாதகமாக்கி ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான டெண்டர்களை கோரியுள்ளன.
கடந்த வாரம் ஐஓசி நிறுவனம் 30 லட்சம் பீப்பாய் உரால்ஸ் கச்சா எண்ணெய்யை விடோல் நிறுவனம் மூலமாக வாங்கியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலையை விட ஒரு பீப்பாய்க்கு 20 டாலர் முதல் 25 டாலர் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வழங்குவதற்காக 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு ஹெச்பிசிஎல் ஆர்டர் அளித்துள்ளது.