

குறு நிறுவனங்களுக்கு உதவும் வகையில் குறு நிறுவன குழும மேம்பாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் பாத்திரங்கள் செய்யும் குழுமம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நரிக்குறவர் செய்யும் செயற்கை நகைகள் குழுமம், கடலூர் மாவட்டத்தில் முந்திரி பதப்படுத்தும் குழுமம், மதுரையில் பொம்மை செய்யும் குழுமம் ஆகியவற்றை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்படுகிறது. கயிறு உற்பத்தி தொழிலை மேம்படுத்த கோவையில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் ரூ.5 கோடியில் அமைக்கப்படுகிறது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் மூலதன மானியமாக ரூ.300 கோடியும், கடன் உத்தரவாத திட்டத்துக்கு ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்துறைக்கு மொத்தம் ரூ.911.50 கோடி ஒதுக்கப்படுகிறது.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்புகளை உருவாக்க ரூ.100 கோடி ஒதுக்கப்படுகிறது. தோல் சார்ந்த தொழில்களை மேம்படுத்த புதிதாக காலணி மற்றும் தோல் தொழில் மேம்பாட்டு கொள்கை வகுக்கப்படும். கோவை, பெரம்பூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்கள் அமைத்து, ரூ.50 ஆயிரம் கோடி அளவில் முதலீடு ஈர்க்கப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின்னணுப் பொருட்கள் தயாரிக்கும் 2 சிறப்பு தொழிற்தொகுப்புகள் நிறுவப்படும். கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன முனையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு தொழில்கள் வளர்ச்சிக்கு மொத்தம் ரூ.3,267.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
புத்தொழில் நிறுவனங்கள்
புத்தொழில்களை வளர்க்க விரிவான கொள்கையை அரசு வகுத்துள்ளது. அதன்படி, புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்ய ரூ.50 கோடி தொடக்க நிதி வழங்கப்படும். சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.75 கோடியில் அனைத்து வசதிகளுடன் மாநில புத்தொழில் நிறுவன மையம் அமைக்கப்படும். இந்நிறுவனங்கள் செய்யும் புதுமையான பொருட்களை அரசுத் துறைகள் ரூ.50 லட்சம் வரை கொள்முதல் செய்ய அனுமதிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு, இயந்திர அறிவு ஆகியவற்றை ஊக்குவிக்க சென்னையில் ரூ.54.61 கோடியில் தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ரூ.199.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.