Last Updated : 26 Apr, 2016 05:54 PM

 

Published : 26 Apr 2016 05:54 PM
Last Updated : 26 Apr 2016 05:54 PM

வெளிநாட்டு சொத்து விவரத்தை உடனே சமர்ப்பிக்க மல்லையாவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்து விவரப் பட்டியலை வங்கிகளிடம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜய் மல்லையா, அவரது மூன்று குழந்தைகள் மற்றும் பிரிந்து வாழும் மனைவி ஆகியோரது பெயரில் உள்ள சொத்து விவரப் பட்டியலை அவருக்கு கடன் அளித்த வங்கிகள் குழுமத்துக்கு அளிக்கும்படி, உச்சநீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த விவர பட்டியலை அளிக்க வேண்டும் என வங்கிகள் சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கோரியிருந்தார்.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உள்ளிட்ட வங்கிகள் கொண்ட குழுவுக்கு இந்த விவரத்தை அளித்து 2 மாதத்துக்குள் இந்த சொத்து விவரப் பட்டியல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை நீதிமன்றத்திடம் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இம்மாதம் 7-ம் தேதிக்குள் குறிப்பிட்ட தொகையை வங்கிகளில் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் மீது விஜய் மல்லையா தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. நீதிமன்றத்தில் எப்போது ஆஜராக முடியும் என்பது தொடர்பான உத்தேச தேதியை தெரிவிக்குமாறு நீதிமன்றம் கோரியிருந்தது. அதற்கும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. இதற்கும் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகள் தொழிலதிபர் விஜய் மல்லையா நடத்திவந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.9 ஆயிரம் கோடியை கடனாக வழங்கியுள்ளன. இந்தத் தொகையைத் திரும்ப செலுத்தாததால் அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என வங்கிகள் சார்பில் கோரப்பட்டிருந்தது.

வங்கிகளுக்கு தர வேண்டிய தொகைக்காக ரூ.4 ஆயிரம் கோடியை அளிக்கத் தயாராக இருப்பதாக விஜய் மல்லையா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இதை வங்கிகள் ஏற்கவில்லை. இதையடுத்து ரூ.4 ஆயிரம் கோடியுடன் கூடுதலாக ரூ.2,468 கோடியை அளிக்கத் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் எந்த தொகையும் செலுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூடி உறையிடப்பட்டு உச்சநீதி மன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட வெளிநாட்டில் உள்ள சொத்து விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்ற விஜய் மல்லையாவின் கோரிக்கையையும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப் நாரிமன் அடங்கிய அமர்வு நிராகரித்து உத்தரவிட்டது.

மேலும் தற்போது அளிக்கப்பட்ட சொத்து விவரங்கள் மீது இரண்டு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெங்களூருவில் உள்ள கடன் மீட்பு தீர்ப்பாயத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தங்கள் குடும்பத்தினர் சொத்து விவரத்தைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விஜய் மல்லையா தரப்பில் கூறப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது என்று வங்கிகள் தரப்பில் கூறப்பட்டது. ஏற்கெனவே 2009-ம் ஆண்டு ஏப்ரல் 9-ம் தேதி குடும்பத்தினருக்கு ரூ.796 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக விஜய் மல்லையா தெரிவித்திருந்ததை வங்கிகள் சுட்டிக் காட்டின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x