Last Updated : 11 Apr, 2016 10:02 AM

 

Published : 11 Apr 2016 10:02 AM
Last Updated : 11 Apr 2016 10:02 AM

விஜய் மல்லையா விவகாரத்தில் வங்கிகள் நஷ்டத்தை குறைத்துக்கொள்ள முன்வர வேண்டும்: தொழில்துறை அமைப்பு அசோசேம் அறிவுரை

விஜய் மல்லையா வங்கிகளுக்கு 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பாக்கி செலுத்த வேண்டிய சூழலில், 4,000 கோடி ரூபாயை கொடுக்க முன்வந்தார். ஆனால் வங்கிகள் இதனை ஏற்க மறுத்தன. இந்த சூழ்நிலையில் வங்கிகள் திறந்த மனதுடன் விஜய் மல்லையா விடம் பேசி தங்களது நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தொழில்துறை அமைப்பான அசோசேம் தெரிவித்துள்ளது.

மேலும் அசோசேம் கூறியிருப்பதாவது.

கடனை திருப்பி செலுத்த வேண் டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அதனால் ஊடகங்களில் வெளியாகும் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவருடன் வங்கிகள் பேச வேண்டும். அவர் 4,000 கோடி ரூபாய் கொடுப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அவருடன் பேச்சுவார்த்தை நடக்கும்பட்சத்தில் இந்த தொகையில் மாற்றம் இருக்கலாம். துபாய், லண்டன், டெல்லி அல்லது மும்பை என மல்லையா எந்த நகரத்தில் இருந்தாலும் அவருடன் பேசி வங்கிகள் தங்களது நஷ்டத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.

ஊடகங்களில் வெளியாகும் தகவல், மற்றும் சரியா தவறா என்பது போன்ற விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வங்கிகள், முதலீட்டாளர்கள் மற் றும் மத்திய அரசு இந்த விஷயத் தில் ஒரு முடிவெடுக்க வேண்டும்.

வங்கிகளை பொறுத்தவரை கொடுத்த கடன், வாராக்கடனாக இல்லாமல் திரும்ப வரவேண்டும். அதை நோக்கி அனைத்து வழியிலும் முயற்சி எடுக்க வேண்டும். கடன் வாங்கியவர்கள், வங்கிகள் என அனைவருக்குமே இது கடினமாக காலகட்டமாகும். மல்லையா அல்லது கிங்பிஷர் விவகாரத்தில் முடிவெடுக்கும் இடத்தில் அசோசேம் இருக்க விரும்பவில்லை. ஆனால் இந்த விவகாரம் ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் அதிகம் விவாதிப் பது தொழில்துறை, வங்கிகளுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் நிதி அமைப்புக்கும் நல்லதல்ல.

இவ்வாறு அசோசேம் கூறியுள்ளது.

விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ம் தேதி இந்தியாவில் இருந்து வெளியேறினார். அமலாக்கத் துறை முன்பாக ஆஜராக மூன்று முறை உத்தரவிட்டிருந்த போதும், மேலும் கால அவகாசம் கேட்டார். தற்போது மே மாதம் இறுதி வரை கால அவகாசம் கோரி இருக்கிறார்.

செப்டம்பருக்குள் 4,000 கோடி ரூபாய் செலுத்த மல்லையா முன்வந்ததை எஸ்பிஐ தலைமையிலான வங்கிகள் குழு நிராகரித்தது. இந்த நிலையில் விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் நிறுவனம் தன்வசம் உள்ள சொத்துகளை வரும் ஏப்ரல் 21-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 26-ம் தேதி நடக்க இருக்கிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x