உலகின் நியான் தேவையில் 50% பூர்த்தி செய்யும் உக்ரைனின் இரு நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்: மின்னணு சாதனங்களின் விலை உயரும் அபாயம்

உலகின் நியான் தேவையில் 50% பூர்த்தி செய்யும் உக்ரைனின் இரு நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம்: மின்னணு சாதனங்களின் விலை உயரும் அபாயம்
Updated on
1 min read

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்கு தலால் நியான் வாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மின்னணு சாதனங்களில் பயன்படுத்தப்படும் சிப் என்று அழைக்கப்படும் செமிகண்டக்டர் தயாரிப்பில் நியான் வாயு மிக முக்கிய அங்கமாக உள்ளது. உலகின் நியான் தேவையில் 50 சதவீதம் உக்ரைனில் உள்ள இங்கஸ் மற்றும் கிரையோயின் என்ற இருநிறுவனங்கள் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ரஷ்யாவின் தாக்குதலால்தற்போது அவ்விரு நிறுவனங்களும் நியான் உற்பத்தியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், உலக அளவில் சிப்தயாரிப்பு பெரும் நெருக்கடிக்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், மின்னணு சாதனங்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கஸ் நிறுவனம் மரியுபோல் நகரத்திலும் கிரையோயின் ஒடெசா எனும் நகரத்திலும் அமைந்துள்ளன. இங்கஸ் நிறுவனம் மாதம் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன மீட்டர்கள் அளவிலும், கிரையோயின் நிறுவனம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கனமீட்டர்கள் அளவிலும் நியான் வாயுவைஉற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் உலகளாவிய நியான் வாயு விநியோகத்தில் 50 சதவீதம் இந்நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படு கிறது.

சிப் தயாரிப்பு நெருக்கடியை சந்திக்கும்

தற்போது இங்கஸ் நிறுவனம் அமைந்திருக்கும் மரியுபோல் நகரத்தின் ரஷ்யப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலில், இங்கஸ் நிறுவனம் பாதிக்கப்படும்பட்சத்தில் உலக அளவில் சிப் தயாரிப்பு பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

மொபைல் போன்கள் முதல் கார்கள் வரையில் சிப் என்பது முதன்மையானதாக உள்ளது. கரோனாவுக்குப் பிறகு மின்னணு சாதனங்களுக்கான தேவை அதிகரித்த நிலையில் சிப்புக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்னும் அந்தத் தட்டுப்பாடு நீடிக்கிறது.

இதனால் பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய தயாரிப்புகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் சிப் தயாரிப்புக்கு அத்தியாவசியமான நியான் வாயு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், சிப் தட்டுப்பாடு பலமடங்கு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in