

கவுகாத்தி: பிஎப் என அழைக்கப்படும் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கு 2021-222 ஆம் நிதியாண்டுக்கு வழங்கப்படும் வட்டியை 8.1 சதவீதக் குறைத்து வழங்குவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற இபிஎப்ஓவின் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்ற மத்திய அறங்காவலர் குழு கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த 2 ஆண்டுகளாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.50 சதவீதமாக நீடித்த நிலையில், தற்போது 8.1 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் வட்டிக் குறைப்பு முடிவுக்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த வட்டி விகிதம் நடைமுறைக்கு வரும்.
இது கடந்த 40 ஆண்டுகளுக்கு முந்தைய வட்டி விகித அளவுக்குக் குறைவாகும். 1977-78ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதிக்கு 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. அதே நிலைக்கு தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் கூறியதாவது:
சர்வதேச நிலவரம் மற்றும் சந்தை நிலவரத்தை மனதில் கொண்டு வட்டி விகிதம் இறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சூழ்நிலையை மதிப்பாய்வு செய்த பிறகே 8.1 சதவீத வட்டி விகிதத்தை பரிந்துரை செய்துள்ளோம். சமூக பாதுகாப்பு மற்றும் சந்தை ஸ்திரத்தன்மையை இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வருங்கால வைப்பு நிதி முதலீடுகளுக்கு மத்திய அரசு அதிக வட்டி வழங்கி வந்தது. 2015-16ஆம் ஆண்டில் சந்தாதாரா்களுக்கு அதிகபட்சமாக 8.8 சதவீத வட்டி வழங்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு அந்த வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது. 2016-17 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாகவும் பின்னர் 2017-18 ஆம் ஆண்டில் மேலும் குறைத்து 8.55 சதவீதமாகவும் நிா்ணயிக்கப்பட்டது.
2018-19 ஆம் ஆண்டில் 8.65 சதவீதமாக உயா்த்தப்பட்டது. 2019-20 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது மேலும் 2020-21 ஆம் ஆண்டில் 8.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.