

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,080 குறைந்ததால், நகைக் கடைகளில் கூட்டம் அலைமோதியது
ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த மாதம் 24-ம் தேதி தொடங்கியது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்தனர். இதனால், தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. கடந்த வாரம் அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது.
இந்த நிலையில், ரஷ்யா- உக்ரைன் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் முயற்சி நடந்து வருகிறது. இதனால், தங்கம் விலையும் கடந்தசில நாட்களாக படிப்படியாக குறைந்து வந்தது. சர்வதேச அளவில் தங்கம் விலை குறைந்ததால் நேற்று உள்ளூரிலும் விலை குறைந்தது.
சென்னையில் 22 காரட் தங்கம்நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.5,020-க்கும், ஒரு பவுன் ரூ.40,160-க்கும் விற்கப்பட்டது. நேற்று கிராமுக்கு ரூ.135 என பவுனுக்கு ரூ.1,080 குறைந்தது. இதனால், ஒரு கிராம் ரூ.4,885-க்கும், ஒரு பவுன் ரூ.39,080-க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை ஒரே நாளில்பவுனுக்கு ரூ.1,080 குறைந்ததால் சென்னையில் நகை வாங்குவதற்காக நகைக் கடைகளுக்கு ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்தனர். இதனால், கடைகளில் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. தங்கம் விலை குறைந்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர நகை வியாபாரிகள் சங்கபொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியபோது, தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. தற்போது இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெறுவதால் தங்கம் விலை குறையத் தொடங்கியுள்ளது. போர் சூழலை பொருத்து தங்கம் விலையில் ஏற்ற,இறக்கம் காணப்படும்’’ என்றார்.