

திருப்பூரில் பின்னலாடைதொழிலில் அட்டைப்பெட்டி முக்கியபங்காற்றுகிறது. இங்கு தயாரிக்கப்படும் புதிய ஆடைகளை அட்டைப்பெட்டிகளில் அடைத்து, வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.
வெளிநாட்டில் இருந்து வரும் கழிவுக் காகிதம் வரி, கெமிக்கல் விலை உயர்வு, கப்பலில் வரும் கன்டெய்னர் வாடகை உயர்வுபோன்ற பல்வேறு காரணங்களால் கிராப்ட் காகிதத்தின் விலை உயர்ந்து வருகிறது. கிராப்ட் காகிதத்தின்விலை டன்னுக்கு ரூ.42,000 ஆகவும்,உயர்ரக காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.52,000 ஆகவும் இருந்தது.கடந்த பிப்ரவரி மாதம் மட்டும், இதன் விலையை 3 முறை தலா ரூ.2,000 வீதம் ரூ.6,000 வரை உயர்த்தி காகித உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்தன.
திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களில் 500-க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்களில்சுமார் 20,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நாளொன்றுக்கு 1,200 டன் அட்டைப்பெட்டிகள் உற்பத்தியாகின்றன. கிராப்ட்காகிதத்தின் விலை உயர்வுக்கு ஏற்ப வாரந்தோறும் அட்டைப்பெட்டிகளின் விலையை உயர்த்துவது என்று அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கிராப்ட் காகிதத்தின் விலை டன்னுக்கு ரூ.2,000 வீதம்2 முறை உயர்த்தி அறிவித்திருப்பது, அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
தென்னிந்திய அட்டைப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் திருமூர்த்தி கூறும்போது, ‘‘கிராப்ட்காகிதத்தின் விலை தொடர்ந்து உயர்வதால், அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலையில் உள்ளனர். கொள்முதலுக்கு 12 % ஜிஎஸ்டியும், விற்பனைக்கு 18 % ஜிஎஸ்டியும் செலுத்தி வருகிறோம்.ஏற்கெனவே உற்பத்தி பாதியாக குறைந்துள்ள நிலையில், கிராப்ட் காகிதத்தின் விலையேற்றம் இன்னும் உற்பத்தியை முடக்கவே செய்யும்’’ என்றார்.
கடந்த மாதம் கிராப்ட் காகிதம் டன்னுக்கு ரூ.6,000 உயர்ந்த நிலையில், நடப்பு மாதத்தில் மட்டும் ரூ. 4,000 உயர்த்தி, காகித உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கடந்த 40 நாட்களுக்குள் ரூ.10,000 விலை உயர்ந்துள்ளது. ஏற்கெனவே அட்டைப்பெட்டிகளுக்கான கிராப்ட் காகிதம் சரிவர கிடைக்கவில்லை. நூல் விலை உயர்வால்,பின்னலாடை உற்பத்தி குறைந்துள்ள நிலையில், அட்டைப்பெட்டிதயாரிப்புக்கான ஆர்டர்களும்குறைந்துவிட்டன. கிராப்ட் காகிதத்தின் விலை உயர்வால் நாடு முழுவதும் அட்டைப் பெட்டி உற்பத்தி முடங்கும்அபாய நிலையில் உள்ளதாக,அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.