Last Updated : 09 Mar, 2022 03:29 PM

 

Published : 09 Mar 2022 03:29 PM
Last Updated : 09 Mar 2022 03:29 PM

கச்சா எண்ணெய் அரசியல்: அமெரிக்க தடையால் தவிக்கும் ஐரோப்பிய நாடுகள்; விலையை குறைக்கும் ரஷ்யா- என்ன செய்யப்போகிறது இந்தியா?

அதிகரிக்கும் கச்சா எண்ணெய்: பிரதிநிதித்துவப் படம்

ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் இதனால் ஐரோப்பிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவுக்காக ரஷ்யாவை நம்பி இருக்கும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. பின்னர் இதன் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. தொடர்ந்து முன்பேர வர்த்தகத்தில் 118 டாலர், 125 டாலர் என தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.

இதன் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என பாங்க் ஆஃப் பரோடா, மார்கன் ஸ்டான்லி, டிடி செக்யூரிட்டீஸ் என பல நிறுவனங்களின் ஆய்வுகளும் எச்சரித்துள்ளன. கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடியாத அளவு இருக்கும் என்றும் ஒரு பீப்பாய்க்கு 300 டாலர்கள் வரை உயரக்கூடும் என ராய்ட்டர்ஸ் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.

இந்தநிலையில் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் அனைத்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் படிப்படியாக நிறுத்த இருப்பதாக பிரிட்டன் அறிவித்துள்ளது.

ஜோ பைடன்- புதின்: கோப்புப் படம்

இந்த அறிவிப்பு கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும். உலக நாடுகள் முழுவதும் பண வீக்கத்தினை இந்த விலை உயர்வு அதிகரிக்கும். குறிப்பாக அமெரிக்கா மற்றும் இதன் ஐரோப்பிய கூட்டணி நாடுகளில் இந்த முடிவுகளின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவில் மூன்று மிகப்பெரிய நாடுகள் கச்சா எண்ணெய் சந்தையில் கோலோச்சுகின்றன. உலக அளவில் கச்சா எண்ணெய் உலகில் அமெரிக்கா 18 முதல் 19% வரை பங்குகளை கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா நாடுகள் தலா 12% பங்குகளைக் கொண்டுள்ளன.

ஒபெக் அமைப்பை வழிநடத்தும் சவுதி அரேபியா மற்ற கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளையும் வழிநடத்துகிறது. இதனால் கச்சா எண்ணெய் விற்பனையில் சவுதி அரேபியாவின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது.

இந்த மூன்று நாடுகளின் ஒட்டுமொத்த பங்களிப்பு 45 சதவீதமாக உள்ளது. ரஷ்யாவின் உலக அளவிலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி 12 சதவீதம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் உலக சந்தையில் கிட்டத்தட்ட 5 மில்லியன் கச்சா எண்ணெய் பீப்பாய்களை ரஷ்யா விநியோகம் செய்கிறது. குறிப்பாக ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யா அதிகஅளவில் கச்சா எண்ணெய் விநியோகம் செய்கிறது.

ரஷ்யாவின் 12% எண்ணெய் ஏற்றுமதியில் பயன்பெறும் முக்கிய நாடாக ஜெர்மனி உள்ளது. அதன் மொத்த எரிபொருள் தேவைக்காக 40% ரஷ்யாவையே நம்பியுள்ளது. அதே போன்று இயற்கை எரிவாயு தேவைக்காகவும் ஜெர்மனி ரஷ்யாவை அதிகம் நம்பியுள்ளது.

பிரதமர் மோடி - ஜோ பைடன்: கோப்புப் படம்

ஜெர்மனி 25 சதவீதத்துக்கும் அதிகமாக இயற்கை எரிவாயுவை நம்பியுள்ளது. அதுவும் ரஷ்யாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்யப்படுகிறது. ரஷ்யாவில் இருந்து இயற்கை எரிவாயு குழாய்கள் மூலமே ஜெர்மனியை வந்தடைகிறது. இதனால் வேறு வழிகளில் ஜெர்மனி எரிவாயுவை பெறவும் வாய்ப்பில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் முடிவுகளை எடுக்கும் முக்கியமான உறுப்பு நாடாக ஜெர்மனி இருப்பதால் தனது நலன் சார்ந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் எடுக்கும் முடிவுகளை ஜெர்மனி எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

உற்பத்தியை அதிகரிப்பது மூலம் ரஷ்ய தடையால் ஏற்பட்டுள்ள இழப்பை உலக நாடுகள் சரி செய்யலாம். ஆனால் அதற்கு நேரம், பணம் மற்றும் முயற்சி தேவைப்படுகிறது. சிறிய அளவில் உற்பத்தி செய்யும் நாடுகள் சப்ளை செயினை தயார் செய்ய கால தாமதம் ஆகும். பல நாடுகள் ஒன்றிணைந்து சப்ளை செய்தால் கூட அதன் அளவு எ்பது ரஷ்யாவின் உற்பத்திக்கு நிகராக இருக்காது.

இதனால் ரஷ்ய தடையால் பாதிக்கப்படப்போகும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இதனால் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை தடைபடாமல் இருக்க அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யும் ஓபக் நாடுகள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அமெரிக்க கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கு அந்த நாடுகள் இசையவில்லை.

புதின்- பிரதமர் மோடி: கோப்புப் படம்

அதுபோலவே இரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்க முன் வந்துள்ளது. ஆனால் இந்த மாற்றம் எல்லாம் உடனடியாக நடந்தால் மட்டுமே ஐரோப்பிய நாடுகள் தப்பி பிழைக்கும். இல்லையெனில் அமெரிக்காவின் தடையை பொருட்படுத்தாமல் புறந்தள்ளும் சூழ்நிலை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்படலாம் என நம்பப்படுகிறது.

இதனிடையே அமெரிக்கா தடையை அடுத்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய ரஷ்யாவில் உள்ள சில நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணம் மாற்றம் செய்ய இடையூறு உள்ளபோதிலும் மற்ற வழிகளில் இதனை செய்ய ரஷ்ய நிறுவனங்கள் தயாராக உள்ளன.

இதனால் உக்ரைன் போரில் நடுநிலை வகிக்கும் சீனா, இந்தியா போன்ற நாடுகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன என்ற கேள்வி எழுந்துள்ளது. அமெரிக்க தடையை புறந்தள்ளி இந்தியா, சீனா போன்ற நாடுகள் ரஷ்ய நிறுவனங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குமா என்ற கேள்வியும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x