

புதுடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடியாத அளவு அதிகரிக்கும் என்றும் ஒரு பீப்பாய்க்கு 300 டாலர்கள் வரை உயரக்கூடும் என ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா மீது கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
ஐரோப்பா முழுவதுமே போர் பதற்றம் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டது.
கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு பீப்பாய் 100 டாலர்களை தாண்டியது. பின்னர் இதன் விலை 110 டாலர்களாக உயர்ந்தது. தொடர்ந்து முன்பேர வர்த்தகத்தில் 118 டாலர்களை கடந்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடரும் என பாங்க் ஆஃப் பரோடா ஆய்வு அறிக்கை தெரிவித்து இருந்தது. உக்ரைன் நெருக்கடியின் காரணமாக பீப்பாய் கச்சா எண்ணெய் 125 டாலராக உயர்ந்து வருவதாக மார்கன் ஸ்டான்லி கணித்தது. வரும் வாரங்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 145 டாலராக ஆகலாம் என்று தரகு நிறுவனமான டிடி செக்யூரிட்டீஸ் எச்சரித்து இருந்தது. இந்த எச்சரிக்கைபடியே தொடர்ந்து கச்சா எண்ணெய் உயர்ந்து வருகிறது.
பெஞ்ச்மார்க் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் நேற்று ஒரு பீப்பாய்க்கு 139 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்தது. பின்னர் சற்று குறைந்தது. இன்று காலை வர்த்தகத்தில் ஒரு பீப்பாய் 124 டாலராக இருந்தது.
உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறினார். இதையடுத்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கணிக்க முடியாத அளவு இருக்கும் என்றும் ஒரு பீப்பாய்க்கு 300 டாலர்கள் வரை உயரக்கூடும் என ராய்ட்டர்ஸ் ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.
அந்த அறிக்கையில் ‘‘உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான தடை காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டாலர் என்ற அளவை எட்டக்ககூடும்.
வடக்கு அட்லாண்டிக் உடன்படிக்கை அமைப்பின் உறுப்பினர்களால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளது.
ரஷ்யாவில் இருந்து எரிசக்தி விநியோகத்தை குறைக்கும் அச்சுறுத்தலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பின்பற்றினால் அந்த நாடுகளில் எண்ணெய் விலை பீப்பாய்க்கு 300 டாலர்களாக இருக்கும். ரஷ்யா-ஜெர்மனி எரிவாயு குழாய் மூடப்படும் ஆபத்து உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.
இதுபோலவே ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் கூறுகையில் ‘‘ரஷ்ய கச்சா எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் நிராகரித்தால் உலகளாவிய சந்தையில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்பது முற்றிலும் தெளிவாக உள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து பெறும் எண்ணெய் அளவை மாற்றுவதற்கு ஐரோப்பா ஒரு வருடத்திற்கும் மேலாக எடுக்கும். அதற்கு கணிசமான அளவு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எண்ணெய் மற்றும் இதர பொருட்களின் விலைகளின் ஏற்றம் உலகளாவிய பணவீக்கத்தை ஏற்படுத்தும்’’ எனத் தெரிவித்தார்.