

நாமக்கல்: தங்கப் பத்திரம் முதலீட்டில் நாமக்கல் கோட்ட தபால் அலுவலகம் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது, என கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நாமக்கல் தபால் கோட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28 முதல் மார்ச் 4-ம் தேதி வரை தங்கப் பத்திரம் திட்ட முதலீடு நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.5,109 என நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் கோட்டத்தில் 3,873 கிராம் அளவில் தங்கப் பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதனால், தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. கடந்த 3 தங்கப் பத்திரம் வெளியீடுகளில் 2 முறை தேசிய அளவில் முதலிடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, என்றார்.