

சென்னை: கரோனா ஊரடங்கால் நஷ்டத்தால் மூடப்பட்ட 54 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு சிறப்பு நிதியுதவி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் (டான்ஸ்டியா) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக அமைப்பின் தலைவர் கே.மாரியப்பன், பொதுச் செயலாளர் வி.நித்தியானந்தன் ஆகியோர், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாடு முழுவதும் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில், கரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 54 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக, தேசிய சிறுதொழில் வாரியம் அண்மையில் நடத்திய சர்வேயில் தெரிய வந்துள்ளது. எனவே, மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் திறக்க சிறப்பு நிதியுதவி திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு மிகக் குறைந்த அளவாக ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.20 ஆயிரம் கோடி வரை மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், விவசாயத் துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது மொத்த பட்ஜெட்டில் 30 சதவீதமாக உள்ளது. சிறு, குறுந்தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒரு சதவீதம் மட்டுமே.
விவசாயத் துறையும், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறையும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வேலைவாய்ப்புக்கும் சமமான பங்களிப்பை வழங்கி வருகிறது. எனவே, சிறு, குறுந் தொழில்களுக்கு வழங்கப்பட்ட நிதி குறைபாட்டை சரி செய்ய வேண்டும்.
சிறு, குறுந்தொழில்களுக்கு உற்பத்திக்கு தேவைப்படும் ஸ்டீல், அலுமினியம், காப்பர், இரும்பு, ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், பிளாஸ்டிக் ஆகிய மூலப் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும். எனவே, மூலப் பொருட்களின் விலையை அடுத்த ஆறு மாதங்கள் வரை அரசு உயர்த்தக் கூடாது.
மேலும், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தப்படும் ஸ்டீல் மூலப் பொருளுக்கு இறக்குமதி வரியில் முழு தீர்வை வழங்க வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.