

மும்பை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில தினங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
அத்துடன் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி முந்தைய காலாண்டில் 8.5 சதவீத வளர்ச்சியை ஒப்பிடுகையில் 5.4 சதவீதமாகக் குறைந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை தொடங்கியதில் இருந்தே சரிவை சந்தித்தன.இன்று பிற்கபலில் சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் அல்லது 2.02 சதவீதம் சரிந்து 55,113 ஆக இருந்தது. என்எஸ்இ நிப்டி 301 புள்ளிகள் அல்லது 1.79 சதவீதம் சரிந்து 16,493 ஆக இருந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் 0.54 சதவீதம் சரிந்தன. நிப்டி வங்கி மற்றும் நிப்டி பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவை முறையே 3.54 சதவீதம் மற்றும் 3.14 சதவீதம் சரிந்தன. இருப்பினும், நிஃப்டி மெட்டல் 3.74 சதவீதம் வரை உயர்ந்தது.