Published : 01 Mar 2022 10:02 PM
Last Updated : 01 Mar 2022 10:02 PM
சென்னை: ஸ்கோடா ஆட்டோ போக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநராகபியுஷ் அரோரா செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இப்பதவியை இதுவரை வகித்து வந்த குர்பிரதாப் பொப்பாரையிடமிருந்து புதிய பொறுப்பை இவர் ஏற்றுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் மிகுந்த அனுபவம் மிக்க அவர் போக்ஸ்வேகன் குழுமத்தின் இந்திய வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்தும் பணியை மேற்கொள்வார். குறிப்பாக இந்தியாவிற்கான 2.0 திட்ட இலக்கான போக்ஸ்வேகன், ஸ்கோடா நிறுவன பணிகளை அவர் மேற்பார்வையிடுவார். அத்துடன் இந்தியாவில் போக்ஸ்வேகன் குழுமத்தின் ஐந்து பிராண்டுகளான – ஸ்கோடா போக்ஸ்வேகன், ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி ஆகியவற்றுக்கும் அவர் பொறுப்பேற்பார்.
போக்ஸ்வேகன் குழும தயாரிப்புகளுக்கு 2022-ம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாகும். பல முக்கியமான நிகழ்வுகள் காத்திருக்கின்றன. போக்ஸ்வேகன் அண்ட் ஸ்கோடா நிறுவனம் இந்தியா 2.0 திட்ட இலக்கை இறுதி செய்ய வேண்டியுள்ளது. ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் போக்ஸ்வேகன் நாட்ச்பேக் வாகனங்கள் இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பியுஷ் அரோரா, ஆட்டோமொபைல் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர், குறிப்பாக இந்திய சந்தையை நன்கு அறிந்தவர். கான்பூர் ஐஐடியில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றவர், புனேயில் உள்ள சிம்பியாசிஸ் சர்வதேச பல்கலையில் சர்வதேச வர்த்தகம் தொடர்பான டிப்ளமோ பெற்றுள்ளார். டாடா மோட்டார்ஸில் தனது ஆட்டோமொபைல் வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். அங்கு முதுநிலை பணி மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் இந்தோனேசியா, மெர்சிடஸ் பென்ஸ் வியட்நாம் உள்ளிட்ட பிரிவுகளில் இயக்குநர் குழுவில் கண்காணிப்பு பொறுப்புகளையும் வகித்துள்ளார். சமீபத்தில் மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் மற்றும் செயல்பாட்டு பிரிவின் தலைவர் பொறுப்பையும் அவர் வகித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT