'தெளிவான பொறுப்பு துறப்பு கட்டாயம்' - கிரிப்டோ விளம்பரத்துக்கு விதிமுறைகள் வெளியீடு

'தெளிவான பொறுப்பு துறப்பு கட்டாயம்' - கிரிப்டோ விளம்பரத்துக்கு விதிமுறைகள் வெளியீடு
Updated on
1 min read

புதுடெல்லி: மெய்நிகர் கரன்சி பரிவர்த்தனையான கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய விளம்பர தர நிர்ணய அமைப்பு (ஏஎஸ்சிஐ) இதை வெளியிட்டுள்ளது. கிரிப்டோ கரன்சி மற்றும் என்எப்டி பரிவர்த்தனை தொடர்பான விளம்பரங்களுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தும்.

இதுபோன்ற வர்த்தக விளம்பரங்களில் மிகவும் பிரபலமானவர்களை இழுக்கும் முயற்சியில் பெரு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், விளம்பரம்பங்களின் முடிவில் பொறுப்பு துறப்பு வெளியிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இதில் முதலீடு செய்வதால் கிடைக்கும் லாபம் உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும். அது துல்லியமானதாகவும், போதுமான தகவல்களை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். அதேபோல எதிர்காலத்தில் லாபம் தரும் என்ற உத்திரவாதத்தை அளிப்பதாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல சிறியவர்கள் இதில் நேரடியாக ஈடுபடுவது போன்ற விளம்பரங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதில் முதலீடு செய்வது மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவது ஒரு தனி நபரின் அடையாளமாக சித்தரிக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. அனைத்துக்கும் மேலாக யாருக்காக விளம்பரம் வெளியயிடப்படுகிறது என்பன போன்ற விவரம் கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் இது குறித்த விவரங்களைப் பெற எவரைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரமும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை முதலீட்டாளர்களின் முதலீட்டு போக்கை கருத்தில் கொண்டு விளம்பர மற்றும் டிஜிட்டல் சொத்து சார்ந்த சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளதாக ஏஎஸ்சிஐ தலைவர் சுபாஷ் காமத் தெரிவித்துள்ளார்.

செய்தித்தாள், டிவி, வானொலி, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து விவரங்களிலும் பொறுப்பு துறப்பு கட்டாயம் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. டிவி விளம்பரங்களில் கட்டாயம் பொறுப்பு துறப்பு தெளிவாக வெளியிடப்படுவதோடு, அந்த வாசகம் உரையாடல் வடிவில் தெரிவிக்கப்பட வேண்டும். அதுவும் வேகமாக அல்லாமல் நிதானமாக விளக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 நிமிஷத்துக்கு மேலான விளம்பரங்களில் பொறுப்பு துறப்பு 5 விநாடிகளாவது இடம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய விளம்பரங்களில் முதலிலும், கடைசியிலும் பொறுப்பு துறப்பு இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

விளம்பர வழிகாட்டுதல் இந்த வர்த்தக நடவடிக்கையை சரியான போக்கில் கொண்டு செல்லும் என்று காயின்ஸ்விட்ஸ் நிறுவனர் ஆஷிஷ் சிங்கால் தெரிவித்துள்ளார்.

இந்த வழிகாட்டு விதிமுறைகள் சட்டபூர்வ அங்கீகாரம் அல்ல என்றும் ஏஎஸ்சிஐ குறிப்பிட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in