Published : 27 Feb 2022 01:14 PM
Last Updated : 27 Feb 2022 01:14 PM
மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘எந்த நேரமும், எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ என்ற திட்டம் மூலம், அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு கணக்குகள் இடையே பணப் பரிவர்த்தனை செய்யலாம் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் பொது பட்ஜெட்டில், அஞ்சல் துறை தொடர்பாக சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, ‘எந்த நேரமும்,எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ என்ற அறிவிப்பு, அஞ்சல் வங்கியை மேலும் மேம்படுத்தும் விதமாக உள்ளது. நாட்டில் உள்ளஅனைத்து அஞ்சல் நிலையங்களையும், மொத்த வங்கி சேவை(Core Banking Solution) வழிமுறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் கணினி, தொலைபேசி வங்கி சேவை, ஏடிஎம் மூலமாக பணப் பரிவர்த்தனைகளை நாட்டின் எந்த மூலையில் இருந்தும் எளிதில் மேற்கொள்ளலாம்.
2022-க்குள் இத்திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கான பணி விரைந்து நடந்து வருகிறது. இதன்மூலம், நாட்டில் உள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள் 100 சதவீதம் மொத்த வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும். மேலும், அஞ்சலக மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோடு இணையவழி பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யும்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் வகையில் 24-ம்தேதி வலைதள கருத்தரங்கம் நடந்தது. இதில், அனைத்து அஞ்சல் நிலையங்களையும் 100சதவீதம் மொத்த வங்கி சேவையின் கீழ் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 11,858 அஞ்சல் நிலையங்களும் ஏற்கெனவே மொத்த வங்கி சேவையில் 100 சதவீதம் இணைக்கப்பட்டுள்ளது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்துஉத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கிக் கணக்குகளின் இயங்குதள வசதியை வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும். இந்த வசதி நடைமுறைக்கு வந்தால், அஞ்சலக சேமிப்பு கணக்கில் இருந்து எந்த ஒரு வங்கிக் கணக்குக்கும், வங்கியில் இருந்து அஞ்சலக சேமிப்பு கணக்குக்கும் பணப் பரிமாற்றம் செய்ய முடியும். இதன்மூலம் கிராமப்புற விவசாயிகள், மூத்த குடிமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் 10,260 அஞ்சல் நிலையங்கள் கிராமப்புறத்திலும், 1,598 அஞ்சல் நிலையங்கள் நகர்ப்புறத்திலும் உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 2.75 கோடி அஞ்சலக சேமிப்புகணக்குகள் உள்ளன. இந்நிலையில், ‘எந்த நேரமும், எங்கிருந்தும் அஞ்சல் சேமிப்புகள்’ திட்டம் மூலம் மேலும் பல வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT