

சென்னை: நாடு முழுவதும் தேசிய தரவு மையங்களை அமைப்பதன் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடுகளை பெறமுடியும் என்று சென்னையில் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.
தேசிய தரவு மையம் மற்றும் இணையக் கொள்கை குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்று, தென் மாநிலங்களை சேர்ந்த உயர் அதிகாரிகள், 300-க்கும் அதிகமான தொழில் நிறுவனபிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலங்களிடம் கருத்து கேட்பு
நாட்டில் தேசிய தரவு மையங்கள், மேக கணிமை (Cloud Computing) அமைப்பதற்கான கொள்கை வரைவு அறிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பிறகு, கொள்கை இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும்.
இந்தியாவில் கல்வி, தொழில், பணப் பரிமாற்றம், பொழுதுபோக்கு என 80 கோடிக்கும் அதிகமானோர் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். கரோனா காலத்தில் கல்விக்காக குழந்தைகளும் இணைய வசதியை அதிகம் பயன்படுத்தினர். இன்னும் ஓரிரு ஆண்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 120 கோடியைதாண்டும். எனவே, அதன் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் தரவுகொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தேவை அதிகரிப்பு
உலக அளவில் தரவு சேமிப்பு மையங்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த சூழலில்,தரவு மையங்களை அமைத்தால், இந்த சேவையில் தன்னிறைவு பெறுவதுடன், அதிக முதலீட்டையும் பெற முடியும். நாடு முழுவதும் தகவல் மையங்களை அமைப்பதற்கான தொழில்கள் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிக்கும். தரவு மையங்கள் அமைக்க தேவையான தண்ணீர், நிலம், மின்சாரம் வழங்க மாநில அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை இணை செயலர் அமிதேஷ் குமார் சின்ஹாகூறும்போது, “தரவு மையங்களுக்காக மின் பயன்பாடு தற்போது 499 மெகாவாட்டாக உள்ளது. 2027-க்குள் கூடுதலாக 2 ஆயிரம்மெகாவாட் தேவைப்படும். அதற்கான திட்டங்களும் தரவு கொள்கையில் வகுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
‘‘அனைத்து மாநிலங்களுக்குமான தரவு மைய கொள்கையைதான் மத்திய அரசு உருவாக்கியுள்ளது’’ என்று அமைச்சர் தெரிவித்தார். ஆனால், தமிழகத்துக்கு தனி தரவு மைய கொள்கையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.