தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானிய நிதி ரூ.267.90 கோடி: மத்திய அரசு விடுவிப்பு

சென்னை மாநகராட்சி- பிரதிநிதித்துவப் படம்
சென்னை மாநகராட்சி- பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஆறு மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியமாக ரூ.1348.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட தகவல்: ஆறு மாநிலங்களின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்க நிதியமைச்சகத்தின் செலவினத் துறை இன்று ரூ.1348.10 கோடி விடுவித்துள்ளது.

தமிழ்நாடு (ரூ.267.90 கோடி), ஜார்க்கண்ட் (ரூ.112.20 கோடி), கர்நாடகா (ரூ.375கோடி), கேரளா (ரூ.168 கோடி), ஒடிசா (ரூ.411 கோடி), திரிபுரா (ரூ.14 கோடி) ஆகியவை மானியங்கள் விடுவிக்கப்பட்ட மாநிலங்களாகும். கன்டோன்மென்ட் பகுதிகள் உட்பட ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கும் குறைவான நகரங்களுக்கு இந்த மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.

15-வது நிதி ஆணையம் 2021-22 முதல் 2025-26 வரையுள்ள காலத்திற்கான அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை 2 வகைகளாக பிரித்துள்ளது.

1. பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் கூடுதலாக உள்ள நகரங்கள் (டெல்லி, ஸ்ரீநகர் தவிர)

2. பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் குறைவான இதர நகரங்கள்

இவற்றுக்கு தனியாக மானியங்கள் வழங்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஆணையம் பரிந்துரை செய்த மானியத்தில் 40 சதவீதம் அவசர தேவைக்கானவை. எஞ்சிய 60 சதவீதம் துப்புரவு, குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு போன்ற பணிகளுக்கானவை.

நடப்பு நிதியாண்டில் ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்காக மாநிலங்களுக்கு இதுவரை மொத்தம் ரூ.10,699.33 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

இதில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டுள்ள தொகையின் அளவு ரூ.1188.25 கோடி. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்தின் பரிந்துரைகள் அடிப்படையில் நிதியமைச்சகத்தால் இந்த மானியங்கள் விடுவிக்கப்பட்டன.

இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in