

மும்பை: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தைகள் சென்செக்ஸ் 2,700 புள்ளிகளாக வீழ்ச்சி கண்டன.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் ஆர்வமாக இருக்கும் சூழலில் அதனை ரஷ்யா எதிர்க்கிறது. உக்ரைனின் போக்கு ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள கிரிமியா மீது ஆதிக்கம் செலுத்த உக்ரைன் முயல்வதாகவும் ரஷ்யா குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் உக்ரைன் மீதுரஷ்யா இன்று தாக்குதல் தொடங்கியுள்ளது.
இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை தொடங்கியதில் இருந்தே சரிவை சந்தித்தன.
இன்று பிற்கபலில் சென்செக்ஸ் 2,700 புள்ளிகள் சரிவடைந்து 54,456 ஆக இருந்தது. என்எஸ்இ நிஃப்டி 845 புள்ளிகள் குறைந்து 16,217ஆக இருந்தது.
நிஃப்டி மிட்கேப் 100 இன்டெக்ஸ் 3 சதவீதம் வரையிலும் குறைந்தது. ஸ்மால் கேப் பங்குகள் 3.50 சதவீதம் வரையிலும் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையின் முக்கிய 15 துறை பங்குகளும் சரிவடைந்து வர்த்தகமாகின. நிஃப்டி பிஎஸ்யூ வங்கி மற்றும் நிஃப்டி ஆட்டோ ஆகியவை முறையே 3.20 சதவீதம் மற்றும் 2.71 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் நிப்டி நஷ்டத்தில் முதலிடத்தில் இருந்தது. டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், யுபிஎல் மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பின்தங்கிய நிலையில் இருந்தன.
இதுபோலவே பல நாடுகளின் பங்குச்சந்தைகளும் இன்று சரிவடைந்தன. ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமான சரிவை கண்டன. ஜப்பானின் நிக்கேய் 2.17 சதவீதமும், தென் கொரியாவின் கோஸ்பிஐ 2.66 சதவீதமும், ஷாங்காய் சந்தை 0.89 சதவீதம் சரிந்தன.