

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையின் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஜனவரி 31-ம் தேதி 91.03 டாலருக்கு வர்த்தகமானது. தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 98 டாலரில் வர்த்தகமாகி வந்தது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பேரல் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. இதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் என்றே கூறப்படுகிறது.
அதேவேளையில், கரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் சந்தையில் சுணக்கம் நிலவியது. எண்ணெய் உற்பத்தி நாடுகள் கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்காகக் காத்திருந்தன. தற்போது உக்ரைன் மீது தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில் இதனை வாய்ப்பாக சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தை. இது ஒரு பேரலுக்கு ரூ.115 டாலர் வரை கூட உயர வாய்ப்பிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் வெகுவாகக் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. அங்கே உயர்ந்தபோதும் இங்கு உயர்த்தப்படவில்லை. இந்நிலையில் இந்தமுறை இந்த விலையேற்றம் இந்திய எரிபொருள் சந்தையில் என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
பங்குச்சந்தையில் சரிவு: இதற்கிடையில், இன்று காலை 9.54 மணியளவில் சென்செக்ஸ் 1,936 புள்ளிகள் சரிந்து 55,296 புள்ளிகளாகவும் வர்த்தகமானது. அதேபோல் நிஃப்டி 572 புள்ளிகள் சரிந்து 16,491 புள்ளிகள் என்றளவில் வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 காசுகள் சரிந்து 75.07 என்றளவில் உள்ளது.
தங்கம், வெள்ளி விலையுயர்வு: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.108 உயர்ந்து ரூ. 4,827-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.864 உயர்ந்து ரூ.38,616-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.60-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,600க்கு விற்பனையாகிறது.