

டெல்லி: விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து ரூ.18,000 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா பிப்ரவரி 23ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மத்திய அரசின் வழக்கறிஞர் துஷார் மேத்தா இந்தப் பதிலை தெரிவித்தார். மேலும், "மல்லையா, நீரவ் மோடி, சோக்ஸி ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மதிப்பு இப்போது ரூ.67,000 கோடி. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகளின் காரணமாக விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து ரூ.18,000 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதேபோல், ஜூலை 2021ல் இந்த மூவரின் சொத்துக்களை விற்பனை செய்ததன் மூலமாக 13,109 கோடி ரூபாயை வங்கிகள் மீட்டெடுத்தது என்று கடந்த ஆண்டு டிசம்பரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் மீட்டெடுப்பின் தவணை ரூ.792 கோடியாக இருந்தது கவனிக்கத்தக்கது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 9,000 கோடி ரூபாய்க்கு மேல் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தாத வழக்கில் விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது அவர் இங்கிலாந்தில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் சோக்ஸி தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு கரீபியன் தீவான ஆன்டிகுவாவில் கைது செய்யப்பட்டார். சோக்ஸியின் மருமகன் நிரவ் மோடியும் இதே வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு லண்டன் தப்பிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.