

தொழிலதிபர் விஜய் மல்லை யாவுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் உத்தரவை மும்பை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஐடிபிஐ வங்கியில் பெற்ற கடன் தொடர்பாக விஜய் மல்லையா மீது அந்நியச் செலாவணி மோசடி வழக்கை அமலாக்கப் பிரிவு மேற்கொண்டிருந்தது. இந்த வழக்கில் விஜய் மல்லையா மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடி ஆணை (வாரண்ட்) பிறப்பிக்க வேண்டும் என கோரியது.
இது தொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி பி.ஆர். வாவ்கே, அமலாக்கப் பிரிவின் கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
60 வயதான விஜய் மல்லையா வுக்கு அமெரிக்கா, தென்னாப் பிரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் சொத்துகள் உள்ளன. இந்தியாவில் ஆஜரா குமாறு அமலாக்கத்துறை பிறப்பித்த 3 சம்மன்களையும் விஜய் மல்லையா மதிக்கவில்லை. இதையடுத்தே அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகியுள்ளது.
அதேசமயம் வங்கியில் கடன் பெற்று அந்தத் தொகை மூலம் விஜய் மல்லையா வெளிநாட்டில் சொத்து வாங்கியதாக அமலாக்கப் பிரிவு கூறும் குற்றச்சாட்டை நீதிமன்றம் ஏற்கவில்லை. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை தவறான மற்றும் முறையற்ற நிறுவனமாக பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
கடந்த ஏப்ரல் 9-ம் தேதி அமலாக்க துறை அனுப்பிய 3-வது சம்மனுக்கு விசாரணை அதிகாரி மூலம் பதில் அனுப்பிய விஜய் மல்லையா, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடப்பதால் தம்மால் நேரில் ஆஜராக முடியாது என தெரிவித்திருந்தார்.
ஏப்ரல் முதல் வாரத்தில் அனுப்பிய சம்மனில் ஏப்ரல் 9-ம் தேதி விஜய் மல்லையா ஆஜராக வேண்டும் என அமலாக்க பிரிவு குறிப்பிட்டிருந்தது. இதற்கு முன்பு மார்ச் 18 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் சம்மன் அனுப்பியிருந்தது.
ஐடிபிஐ வங்கியில் பெற்ற ரூ.950 கோடி கடன் தொகையில் ரூ.430 கோடி தொகை வெளி நாட்டில் சொத்து வாங்க பயன் படுத்தப்பட்டுள்ளது என்று அமலாக் கத்துறை விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பான விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடந்தபோது அதை மல்லையா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரணாவ் படேகா மறுத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு மிகவும் தவறானது என்று தனது மனுவில் குறிப்பிட்ட வழக்கறிஞர், தனது வாதத்தை நிரூபிக்கும் வகையிலான விவரங்களை அதில் அளி்த்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம் நீதிமன்றத்தில் தவறான தகவல் பதிவு செய்யப்பட்டு விடக்கூடாது என்றும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார்.
இந்தத் தொகை பல்வேறு விதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது விமான குத்தகை கட்டணம், விமான உதிரி பாகங்கள் வாங்கியதற்கு செலுத்தப்பட்டது மற்றும் விமான பராமரிப்புக் கட்டணமாக செலுத்தப்பட்டதாக கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தத்தொகை வெளிநாட்டில் சொத்து வாங்க பயன்படுத் தப்பட்டதாகக் குற்றம் சாட்டி யிருந்தது.
அமலாக்க பிரிவு இது தொடர்பாக பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மூலம் நடத்தப்பட்ட பரிவர்த்தனையை ஆய்வு செய்து அதனடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்திருந்தது. இந்தத் தொகை கருப்புப் பணத்தை பதுக்கும் நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு வீடியோ கான்பரன்ஸ் முறையில் அல்லது இணையதளம் மூலமாக பதில் அளிப்பதாக விஜய் மல்லையா தெரிவித்திருந்தார்.ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் வசதிப்படி விசாரணை நடத்த முடியாது என்று அந்தக் கோரிக் கையை நிராகரித்து விட்டதாக அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹிதேன் வெங்கோங்கர் தெரிவித்திருந்தார். அவ்விதம் விசாரணை நடத்தப் பட்டால் சாட்சிகளை அவர் அழித்துவிடுவதற்கான சாத்தியங் கள் உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.