

புதுடெல்லி: தேசியப் பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா, இமயமலை சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படியே அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. 2013-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையில் என்எஸ்இ-யின் தலைமைச் செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா பொறுப்பு வகித்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, தலைமை மூலோபாய அதிகாரியாக, அந்தப் பொறுப்புக்கான முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நியமித்து அவருக்கு ரூ.4 கோடி சம்பளம் மற்றும் பல சலுகைகளை வழங்கியுள்ளார்.
இந்த முடிவுகள் அனைத்தையும் முகம் தெரியாத இமயலை சாமியாரின் ஆலோசனையின் பெயரிலே சித்ரா எடுத்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. அந்த சாமியாரின் பெயர் சிரோன் மணி என்றும் அந்த சாமியாரை இதுவரை நேரில் பார்த்ததில்லை என்றும் மின்னஞ்சல் வழியாகவே அவரை தொடர்பு கொண்டுள்ளதாகவும் சித்ரா தெரிவித்துள்ளதாக செபி குறிபிட்டுள்ளது. என்எஸ்இ-யின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள் என பலவற்றையும் அவர் அந்த சாமியாருடன் பகிந்துள்ளதாகவும் இதற்காக அந்தச் சாமியாருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் செபி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்துள்ளது. இந்த முறைகேட்டை தடுக்க தவறியதற்காக என்எஸ்இ ஒழுங்கு அதிகாரி வி.ஆர்.நரசிம்மனுக்கு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் சுப்ரமணியன் மனித உளவியலில் பரிச்சயம் கொண்டவர் என்றும், அவர்தான் இமயமலை சாமியாராக புனைந்து சித்ராவைதன் விருப்பப்படி ஆட்டி வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.சித்ரா ராமகிருஷ்ணா