

புதுடெல்லி: நடப்பு 2021-22 நிதி ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வருவாய் 227 பில்லியன் டாலரை எட்டவுள்ளது என்றும் இது முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15.5 சதவீத வளர்ச்சி என்றும் மென்பொருள் நிறுவனங்களின் தேசிய சங்கமான நாஸ்காம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் சென்ற நிதி ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதி ஆண்டில் ஐடி துறையின் வருவாய் 33 பில்லியன் டாலர் அளவில் அதிகரித்துள்ளது.
கரோனா சூழல் காரணமாக ஏனைய துறைகள் நெருக்கடியைச் சந்தித்த நிலையில் ஐடி துறை நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. கரோனா காலத்தில் இந்தியா டிஜிட்டலை நோக்கி மிக வேகமாக நகர்ந்தது ஐடி துறையின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
நடப்பு நிதி ஆண்டில் ஐடி துறை சார்ந்த ஏற்றுமதி 17.2 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி மூலம் 178 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. உள்நாட்டு சந்தை மூலமாக 49 பில்லியன் டாலர் அளவில் வருவாய் பெற்றுள்ளது என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் மட்டும் 4.5 லட்சம் பேர் புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர். இதில் 44 சதவீதம் பேர் பெண்கள். இந்தியாவில் ஐடி துறையில் 50 லட்சம் பேர் அளவில் பணி புரிகின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 18 லட்சமாக உயர்ந்துள்ளது.
2021-ம் ஆண்டில் மட்டும் புதிதாக 2,250 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் 11 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியிட்டுள்ளன.
- பிடிஐ