

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் வியாபாரி ஒருவர் புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழங்களின் பெட்டியை ரூ.31 ஆயிரத்துக்கு ஏலத்தில் வாங்கினார். இது 50 ஆண்டுகளில் இல்லாத விலையாகும்.
அல்போன்சா மாம்பழம் ஹாபஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. மாம்பழங்களில் மிகச் சிறந்த ஒன்றாக இது கருதப்படுகிறது. மாம்பழங்களின் ராஜா என்று இதனை குறிப்பிடுகின்றனர். மகாராஷ்டிராவில் அல்போன்சா உற்பத்தி முக்கியமாக கொங்கன் மற்றும் ரத்தினகிரி மாவட்டங்களில் மட்டுமே நடைபெறுகிறது.
இந்நிலையில் புனே நகரில் உள்ள வேளாண் விளைபொருள் விற்பனைக் கூடத்துக்கு நேற்று அல்போன்சா மாம்பழங்கள் வந்தன. இதனை வியாபாரிகள் ஏலம் கேட்டனர்.
ரூ.5 ஆயிரத்தில் தொடங்கிய ஏலம் ரூ.31 ஆயிரம் வரை சென்றது. இறுதியில் வியாபாரி ஒருவர், ஒரு பெட்டி அல்போன்சா மாம்பழங்களை ரூ.31 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார்.
இதுகுறித்து அந்த வியாபாரி கூறும்போது, “இந்த சீசனுக்கான முதல் மாம்பழங்கள் இவை. அன்போன்சா மாம்பழம் எப்போதும் முதல் ‘லாட்’ சந்தைக்கு வரும்போது, வியாபாரிகள் அதை கைப்பற்ற முயற்சிப்பதால் அவை அதிக விலைக்குத்தான் ஏலம் போகும். முதல் பெட்டிக்கான ஏலத்தில் பங்கெடுப்பது எப்போதும் நல்லது. மொத்த விற்பனை சந்தையில் எங்கள் கை ஓங்கியிருப்பதற்கு இது உதவும். 50 ஆண்டுகளில் இல்லாத கொள்முதல் விலை இது” என்றார்.