

புதுடெல்லி: சிறு, குறு மற்றும் நடுத்தர (MSME) தொழிலின் வட்டிக்கு சமமான மானியத்தொகை திட்டத்திற்கான காலக்கெடுவை மார்ச் 2022 வரை நீட்டிக்க திமுக எம்.பி செந்தில்குமார் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதிநாளில் தருமபுரி மக்களவை தொகுதியின் எம்.பி செந்தில்குமார் இதுதொடர்பாக பேசுகையில், "குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க, வெளிநாடு ஏற்றுமதி வர்த்தக மேம்பாடு திட்டம் உள்ளது. இந்த திட்டம் 2015 முதல் 2020 வரையிலான 'இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக கொள்கை'யின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் கொண்டுவந்தபோது வணிக ஏற்றுமதியாளர்கள் நாட்டின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 35 சதவீத பங்கைக் கொண்டிருந்தனர். இத்திட்டத்தில் 3 முதல் 5 சதவிகிதம் வரை வட்டி மானியமாக வழங்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, கடன் செலவைக் குறைப்பதற்கும், லாபத்தை அதிகரிப்பதற்கும் உதவியது. ஆரம்பத்தில் இத்திட்டம் ஏப்ரல் 2020 வரை செல்லுபடியாகும் என்று கொள்கை விளக்க குறிப்புகளில் சொல்லப்பட்டது. பின்னர் கரோனா தொற்றுநோய்க் காரணமாக மார்ச், 2021 வரை ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டது. அதிலிருந்து சிறு-சிறு காலமாக நீட்டிப்பு செய்யப்பட்டது. முதலில், ஜூன் 2021 வரையும், பின்னர் செப்டம்பர் 2021 வரை நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு எந்த நீட்டிப்பும் செய்யப்படவில்லை. இதனிடையே, இந்த வகையான தற்காலிக நீட்டிப்புகள் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த அக்டோபர் 2021 முதல் ஏற்றுமதியாளர்கள் வழக்கமான வட்டி விகிதத்தை செலுத்தி வருகிறார்கள். இதில் முரண்பாடாக, 2015 முதல் 2020 ஆம் ஆண்டிற்கான வெளிநாட்டு வர்த்தக கொள்கையை மார்ச் 2022 வரை நீட்டித்துள்ளார்கள். ஆனால் அதன் ஒரு பகுதியாக இருக்கும் வட்டிக்கு சமமான மானியத்தொகை திட்டத்திற்கு நீட்டிப்பு கிடைக்கவில்லை. இந்தத் திட்டம் விவசாயம், நெசவு மற்றும் ஜவுளி, தோல் சார்ந்த வணிகம், கைவினைப் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர் சார்ந்த துறைகளில் உள்ள தயாரிப்புகளை இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், 2022 நிதியாண்டில் இத்திட்டத்திற்காக அரசாங்கம் ரூ.1,900 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இவை அனைத்தும் மேற்கோள்காட்டி நான் வலியுறுத்த விரும்புவது இத்திட்டத்தின் காலக்கெடுவை வரும் மார்ச் 31, 2022 வரை நீட்டிக்க வேண்டும் என்பதே. காலக்கெடுவை நீட்டிப்பதோடு, அதே திட்டத்தை அடுத்த ஐந்து ஆண்டுகால வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையில் சேர்க்க வேண்டும். அப்படி சேர்த்தால் குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தயாரிப்புகளின் ஏற்றுமதி மற்றும் போட்டித்தன்மையை ஊக்குவிக்கும்" என்று தெரிவித்துள்ளார்.