Published : 12 Feb 2022 05:31 AM
Last Updated : 12 Feb 2022 05:31 AM

ரிசர்வ் வங்கி எச்சரிக்கையால் முடிவில் தாமதம்; கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு தடை? - நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாடாளுமன்றத்தில் நடந்து வந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று அவை நடவடிக்கைகளை முடித்து வெளியே வரும் எம்.பி.க்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி: மெய்நிகர் கரன்சியான கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா அல்லது அதை அனுமதிப்பதா என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மூலம் பெறப்படும் ஆதாயத்துக்கு வரி விதிக்கும் உரிமை அரசுக்கு உள்ளது. இத்தகைய கிரிப்டோ கரன்சி பரிமாற்றத்தை அனுமதிப்பதா அல்லது அதற்கு தடை விதிப்பதா என்பது குறித்து ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும். கிரிப்டோ கரன்சியை சட்டரீதியான பரிவர்த்தனையாக அனுமதிப்பது அல்லது அதற்கு தடை விதிப்பது போன்ற எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆனால், அதன்மூலம் பெறப்படும் லாபத்துக்கு வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார மந்தநிலை, தேக்கநிலை என்பதற்கான வாய்ப்பே இல்லை. மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2 சதவீத அளவுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

கிரிப்டோ கரன்சி மூலமான பரிவர்த்தனைக்கு 30 சதவீத வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது மிக அதிகபட்ச வரி விதிப்பாகும். பிளாக்செயின் தொழில்நுட்ப அடிப்படையிலான டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு அறிமுகப்படுத்தும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆர்பிஐ-யின் இந்த நடவடிக்கை டிஜிட்டல் வர்த்தகத்தில் மிகப்பெரும் எழுச்சியாக அமையும் என்றும், டிஜிட்டல் கரன்சி மிகவும் வலிமையானது, மேலும் இதற்கான நிர்வாக செலவு மிகவும் குறைவு என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

தனியார் நிறுவனங்களின் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனையால் பணப் புழக்கத்தில் ஸ்திரமற்ற சூழல் உருவாகும் அபாயம் உள்ளது என ஆர்பிஐ எச்சரித்துள்ளது. இதன் காரணமாகவே, இந்த விஷயத்தில் உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 2 கோடி பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ரூ.40 ஆயிரம் கோடி வரை முடக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பட்ஜெட் கூட்டம் முதல் அமர்வு நிறைவு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜன.31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜன.31 முதல் பிப்ரவரி 11 (நேற்று) வரையும் இரண்டாவது அமர்வு மார்ச் 14 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் நடக்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. கடந்த பிப்.1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீ்ர்மானம் மற்றும் பட்ஜெட் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் நேற்று பதிலளித்தார். பின்னர், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்ததாகவும் மாநிலங்களவை மீண்டும் மார்ச் 14-ம் தேதி கூடும் என்றும் அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் அறிவித்தார்.

இதேபோல, மக்களவையில் நேற்று மாலை அலுவல்கள் முடிந்ததும் மார்ச் 14-ம் தேதி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வில் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x