சன்மார் கெமிக்கல்ஸில் பேர்பாக்ஸ் ரூ.2,000 கோடி முதலீடு

சன்மார் கெமிக்கல்ஸில் பேர்பாக்ஸ் ரூ.2,000 கோடி முதலீடு
Updated on
1 min read

சென்னையைச் சேர்ந்த சன்மார் கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் பேர்பாக்ஸ் இந்தியா ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ.2,000 கோடி (30 கோடி டாலர்) முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் சன்மார் குழுமத்தின் 30 சதவீத பங்குகள் பேர்பாக்ஸ் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.

ஆரம்பத்தில் 25 கோடி டாலர் தொகை முதலீடு செய்யப்படும் என்றும் அடுத்த 5 கோடி டாலர் முதலீடு 90 நாட்களுக்கு பிறகு பேர்பாக்ஸ் நிறுவனம் அல்லது வேறு முதலீட்டாளர் முதலீடு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட முதலீடு நடப்பு ஆண்டில் 2-ம் காலாண்டுக்குள் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் பாலி வினைல் குளோரைடு (பிவிசி) உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முக்கியமானது சன்மார் ஆகும். ஆண்டு உற்பத்தி திறன் 3 லட்சம் டன் ஆகும். இந்தியா தவிர எகிப்தில் 2 லட்சம் டன் உற்பத்தி திறன் இருக்கிறது. இதனை ஆண்டுக்கு 4 லட்சம் உற்பத்தி திறனாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க நடவடிக்கை முடிந்த பிறகு மொத்த உற்பத்தி திறன் ஆண்டுக்கு 7 லட்சம் டன்னாக இருக்கும். அப்போது உலகின் பிவிசி அதிகம் உற்பத்தி செய்யும் நிறுவனமாக சன்மார் இருக்கும்.

இதை தவிர சில வேதிப்பொருட்களையும் சன்மார் நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பேர்பாக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரேம் வாட்ஸா கூறும்போது, தென்னிந்தியாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணை வதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

பேர்பாக்ஸ் நிறுவனத்தின் முதலீடு கிடைப்பதால் சன்மார் குழுமம் நிதி நிலைமையில் பலமடையும். இந்த முதலீட்டை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று சன்மார் கெமிக்கல்ஸ் குழுமத்தின் தலைவர் என்.சங்கர் கூறினார்.

பேர்பாக்ஸ் நிறுவனம் கடந்த 12 மாதங்களில் இந்தியாவில் 100 கோடி டாலருக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜிவிகே பவர் நிறுவனத்துக்குச் சொந்தமான பெங்களூரு விமான நிலையத்தின் 33 சதவீத பங்குகளை பேர்பாக்ஸ் நிறுவனம் வாங்கியது. இதன் மதிப்பு 2,149 கோடி ரூபாயாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in