

வங்கிகளின் கடனை வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியலில் கிங்பிஷர் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மிக அதிக அளவில் பணத்தை திருப்பி செலுத்தாத நிறுவனமாக இரும்பு உருக்கு துறையில் உள்ள உஷா இஷ்பட் உள்ளது. ரிசர்வ் வங்கி பட்டியல்படி உஷா இஷ்பட் நிறுவனத்தின் நிறுவனர் வினய் ராய் மிக அதிக அளவில் பணத்தை வாங்கி திருப்பி செலுத்தாதவராக உள்ளார் என்று நியூஸ் லாண்டரி என்கிற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த இணையதளம் மிகப் பெரிய அளவில் பணத்தை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த 10 நபர்களை பட்டியலிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 4 இரும்பு உருக்கு நிறுவனங்கள் உள்ளன.
லாயிட்ஸ் ஸ்டீல் நிறுவனம் 2 வது இடத்திலும், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 6 வது இடத்திலும், உஷா குழுமத்தைச் சேர்ந்த மால்விகா ஸ்டீல் 10வது இடத்திலும் உள்ளன. கிங்பிஷர் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 3,259 கோடி ரூபாய் திருப்பி செலுத்தாததை மட்டுமே இந்த இணையதளம் எடுத்துக்கொண்டுள்ளது.
உஷா இஷ்பட் நிறுவனம் மொத்தம் 16,911 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளது. இதில் பெரும்பகுதி எல்ஐசி நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டியுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள லாயிட்ஸ் ஸ்டீல் நிறுவனம் 9,479 கோடி கடனை திருப்பி செலுத்தாமல் உள்ளது. தொலைத் தொடர்பு துறையில் உள்ள ஹிந்துஸ்தான் கேபிள் நிறுவனம் 4,917 கோடி ரூபாயும், ஹிந்துஸ்தான் போட்டோபிலிம் நிறுவனம் ரூ.3,929 கோடியும், ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஜூம் நிறுவனம் 3,843 கோடி ரூபாயும் கடனை திருப்பி அளிக்காமல் உள்ளன.
வங்கிக் கடனை செலுத்தாமல் நாணயம் தவறியவர்கள் மற்றும் நிறுவனங்களின் வாரக்கடன் ரூ.5 லட்சம் கோடி என்று 2015 டிசம்பர் 24ல் ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் கடன் விவகாரம் இப்போது வழக்கில் உள்ள நிலையில், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பெயர்களை அறிவிக்காமல் இருப்பது ஏன் என ஆர்பிஐக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும் கடன் தொகை குறித்த விவரத்தையும் கேட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் ஆர்பிஐ ரகசிய பட்டியலில் இந்த பெயர்கள் இருந்துள்ளது.
முக்கிய 10 கடனாளி நிறுவனங்களில் கிரானஸ் சாப்ட்வேர் இண்டர்நேஷனல், ஜவுளி நிறுவனமான ப்ராக் போஸ்மி சின்தடிக்ஸ் நிறுவனமும் இடம் பெற்றுள்ளது. இந்த நிறுவனங்களில் ஹிந்துஸ்தான் கேபிள், ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம், ப்ராக் போஸ்மி மற்றும் மால்விகா ஸ்டீல் நிறுவனங்கள் பொதுத்துறை நிறுவனங்களின் கீழ் வருகின்றன. உஷா குழுமத்திடமிருந்து மால்விகா ஸ்டீல் நிறுவனத்தை 2009ல் செயில் வாங்கியது.
ஹிந்துஸ்தான் கேபிள் மற்றும் ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனங்கள் நலிவடைந்து மூடப்படும் நிலையில் உள்ளன. பாராக் போஸ்மி நிறுவனம் அரசு-தனியார் கூட்டு முதலீட்டில் 2012ல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள ஒரேதொழில் நிறுவனம் இது. கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.