சமையல் எண்ணெய் விலை உயர்வு; பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

சமையல் எண்ணெய் விலை உயர்வு; பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: சமையல் எண்ணெயின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு பதுக்கல், கள்ளச்சந்தையை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களின் இருப்பு வரம்பு உத்தரவின் அமலாக்கத்திற்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடனான கூட்டத்திற்கு மத்திய அரசு தலைமை தாங்கியது

நாட்டில் சமையல் எண்ணெய் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 2022 ஜூன் 30 வரையில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களின் இருப்பு வரம்பு குறித்து 2022 பிப்ரவரி 3 அன்று உத்தரவு ஒன்றை அரசு பிறப்பித்தது.

இந்த உத்தரவு சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்களின் இருப்பு மற்றும் விநியோகத்தை முறைப்படுத்த மத்திய அரசுக்கும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் அதிகாரமளிக்கிறது. நாட்டில் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் பதுக்கப்படுவதை தடுப்பதற்கும் அரசுக்கு உதவுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்துவது பற்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் விவாதிக்க நேற்று உணவு மற்றும் பொது விநியோகத் துறையால் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், வழங்கல் தொடருக்கு இடையூறு இல்லாமலும் வர்த்தகத்திற்கு அனாவசியமான பிரச்சனை ஏற்படாமலும் இந்த உத்தரவை அமலாக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் குறிப்பிடப்பட்ட இருப்பு வரம்புக்குள் சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் அளவை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள https://evegoils.nic.in/eosp/login என்ற இணையப் பக்கத்தின் மூலம் மாநிலங்களும் தொடர்ச்சியாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டன.

இந்த நடவடிக்கைகள் சமையல் எண்ணெயின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதோடு பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற நியாயமற்ற நடவடிக்கைகளையும் தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள சர்வதேச விலை நிலவரம் பற்றியும் இது இந்தியச் சந்தையை எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றியும் கூட இந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது என நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in