Published : 09 Feb 2022 07:24 AM
Last Updated : 09 Feb 2022 07:24 AM

ஆசிய பணக்காரர் பட்டியலில் கவுதம் அதானி முதலிடம்: பின்தங்கினார் ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி

கவுதம் அதானி

புதுடெல்லி: ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார் தொழிலதிபர் கவுதம் அதானி. தொடர்ந்து முதலிடத்தில் இருந்துவந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இரண்டாமிடத்துக்கு தள்ளப்பட்டார்.

59 வயதாகும் கவுதம் அதானின் சொத்து மதிப்பு 8,850 கோடி டாலராக உயர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 8,790 கோடி டாலராக உள்ளது.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 1,200 கோடி டாலர் அதிகரித்ததில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்த ஆண்டில் உலகிலேயே அதிகபட்ச வருமானத்தை ஈட்டிய தொழிலதிபர் என்ற பெருமையும் இவரைச் சாரும்.

நிலக்கரி சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கத்துக்கு பெற்ற அனுமதி பெரும் சர்ச்சைக்குள்ளானது.

பருவ நிலை மாறுபாடு விழிப்புணர்வு ஆதரவாளர்கள் பலரும் நிலக்கரி சுரங்கத் தொழில் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மரபுசாரா எரிசக்தித் தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறது அதானி குழுமம். இது தவிர விமான நிலைய பராமரிப்பு, ராணுவ தளவாட ஒப்பந்த பணி உள்ளிட்ட தொழில்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த 2 ஆண்டில் அதானி குழும பங்குகள் விலை 600% அளவுக்கு அதிகரித்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அடுத்த 3 ஆண்டுகளில் பசுமை சார்ந்த எரிசக்திக்கென 1,000 கோடி டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார். அதானி அடுத்த 8 ஆண்டுகளில் 7,000 கோடி டாலர் முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x