

யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தி வரும் எப்எம்சிஜி நிறுவனமான பதஞ்சலி ஆயுர்வேதிக் நிறுவனம் இந்த நிதியாண்டில் விரிவாக்கப் பணிகளுக்காக 1,150 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்த முதலீடு மூலம் ஆறு பதப்படுத்தும் பிரிவுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் அமைக்க உள்ளதாக பதஞ்சலி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாங்கள் 1,000 கோடி ரூபாயை பதப்படுத்தும் பிரிவு அமைப்பதற்கும் 150 கோடி ரூபாயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கும் முதலீடு செய்ய இருக்கிறோம். மேலும் நடப்பு நிதியாண்டில் எங்களது மொத்த 10,000 கோடி ரூபாயாக உயரும் என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்த பதப்படுத்தும் பிரிவுகள் அசாம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அமைக்கப்பட இருக்கிறது.
எங்களது வளர்ச்சி இலக்கை அடைய பால் சார்ந்த பொருட்கள், யோகாவிற்கான காதி பொருட்கள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்த இருக்கிறோம். மேலும் பால் சார்ந்த பொருட்கள் பிரிவில் இந்த வருடம் நுழைய இருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக பால், மோர், பனீர் ஆகியவற்றை அறிமுகப்படுத்த இருக்கிறோம் என்று பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
மேலும் முதலீட்டுகான ஆதாரம் பற்றி கேட்டதற்கு வங்கிகள் எங்களுக்கு கடன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றன. இதுவரை எங்களது விரிவாக்கப் பணிகளுக்கான முதலீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டதில்லை. நாங்கள் கடன் இல்லாத நிறுவனமாக இருக்க விரும்புகிறோம் என்று பாபா ராம்தேவ் தெரிவித்தார்.