

புதுடெல்லி: தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை 6,73,958 பேர் துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாவு இணைப்புகள் தொடர்பாக மக்களவையில் எழுத்து மூலம் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி வெளியிட்ட தகவல்கள்: பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் 5 கிலோ அல்லது 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு இணைப்புகளை தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
01.01.2022 நிலவரப்படி எண்ணெய் நிறுவனங்கள் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டப் பயனாளிகளுக்கு 8.1 லட்சம் 5 கிலோ இணைப்புகளை விடுவித்துள்ளது. இது தவிர எண்ணெய் நிறுவனங்கள் பயனாளிகளுக்கு 14.2 கிலோ மற்றும் 5 கிலோ உருளையை தேர்வு செய்யும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. 14.2 கிலோ உருளைப் பயனாளிகளில் 7.69 லட்சம் பேர் 5 கிலோ உருளைக்கு மாறியுள்ளனர்.
01.01.2022 நிலவரப்படி 1.08 கோடி எல்பிஜி வாடிக்கையாளர்கள் தங்களது மானியத்தை தானாக முன்வந்து விட்டுக் கொடுத்துள்ளனர். தமிழகத்தில் 6,73,958 பேரும், புதுச்சேரியில் 16,553 பேரும் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லா 8 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2016 மே 1 அன்று பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. 2019 செப்டம்பரில் திட்டத்தின் இலக்கு எட்டப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு டெபாசிட் இல்லா 1 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2021 ஆகஸ்ட் 10 அன்று பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்கப்பட்டது. இக்கட்டத்தின் போது டெபாசிட் இல்லா சமையல் எரிவாயு இணைப்புடன் இலவச உருளை மற்றும் அடுப்பும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது .
ஒரு ஏழை குடும்பத்தில் எந்த உறுப்பினரின் பெயரிலும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத பட்சத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு அக்குடும்பத்தின் பெண் உறுப்பினரின் பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் வாரியாக எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.
ஏற்கெனவே உள்ள வழிமுறைகளின் கீழ் கூடுதலாக 60 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புக்களை வழங்குவதற்காக 2022 ஜனவரியில் இத்திட்டத்தை அரசு நீட்டித்தது.