Published : 02 Feb 2022 07:07 AM
Last Updated : 02 Feb 2022 07:07 AM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் புதிய டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் திட்டம், 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் திட்டம் உட்பட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த பட்ஜெட்டில் மாதாந்திர சம்பளதாரர்கள் வரிச்சலுகை கிடைக்கும் என்று அதிகம் எதிர்பார்த்தனர். 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நிச்சயம் சலுகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் மேலோங்கியிருந்தது. வருமான வரி விதிப்புக்குப் பதிலாக செலவு வரி விதிக்கலாம் என்று பலர் பரிந்துரைத்திருந்தனர். இதனால் பரவலாக வரிச்சலுகை இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆனால் நிரந்தர கழிவு ரூ.50 ஆயிரம் சலுகை வரம்பைக்கூட அமைச்சர் அதிகரிக்கவில்லை. இது மாத சம்பளதாரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக அமைந்துள்ளது. மூலதன செலவினம் ரூ. 7.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகும். பசுமை பத்திரங்களை வெளியிட நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கரன்சி மற்றும் என்எப்டி எனப்படும் மெய்நிகர் பணப் பரிவர்த்தனை மீது ஈட்டப்படும் வருமானத்துக்கு 30 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மெய்நிகர் சொத்து பரிவர்த்தனைக்கு ஒரு சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி சார்பில் புதிதாக டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுதவிர இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் என நிதியமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
நடப்பாண்டில் தேசிய நெடுஞ்சாலை 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான எக்ஸ்பிரஸ் வழித்தட மாஸ்டர் பிளான் உருவாக்கப்பட உள்ளது.
அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் ரூ. 65 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்களுக்கான குறைந்தபட்ச மாற்று வரி (மேட்) 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அரசு மேற்கொள்ளும் திட்டப் பணிகளால் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்துக்கென ஒருங்கிணைந்த வகையில் தபால் மற்றும் ரயில்வே நெட்வொர்க் இணைந்து செயல்படுத்தப்படும் என்றும் மூன்று ஆண்டுகளில் 400 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளின் கற்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு 200 புதிய கல்வி சேனல்கள் உருவாக்கப்படுகிறது. டிஜிட்டல் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 80 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையை ஊக்குவிக்கவும், நவீனமயமாக்கலை புகுத்தவும் ட்ரோன்கள் பயன்பாட்டை அதிகரிக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் ரசாயன கலப்பு இல்லாத வேளாண் சாகுபடியை ஊக்குவிக்கப் போவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு நடைமுறையை எளிமைப் படுத்தும் வகையில் ‘ஒரே நாடு, ஒரே பதிவுமுறை’ திட்டம் கொண்டுவரப்படும்.
மத்திய பட்ஜெட்டில் புதிதாக வரிச்சுமை ஏதும் மக்கள் மீது போடவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பட்ஜெட்டில் வரிச்சுமை ஏதும் போடவில்லை. கடந்த ஆண்டிலும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. அதைப் போலவே வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை. புதிய வரி விதிப்பு மூலம் ஒரு பைசா கூட திரட்டவில்லை.
கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக புதிய வரிகள் போட வேண்டாம் என்று பிரதமர் அறிவுறுத்தினார். மிக அதிக அளவில் நிதிப் பற்றாக்குறை நிலவிய போதிலும் புதிய வரிகள் போடவில்லை. பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீது புதிய வரிச் சுமை ஏற்றப்பட வேண்டாம் என்பதே முக்கிய நோக்கமாகும். இதையே இந்த ஆண்டும் அறிவுறுத்தினார். இதனால் வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டிலும் புதிய வரி விதிப்புகள் இல்லை.
கரோனா பெருந்தொற்று சவாலை சமாளிப்பதற்கு தேவை யான நிதியை வரி விதிப்பை அதிகரித்து சமாளிக்க முயற்சி எதையும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
பிரதமர் மோடி புகழாரம்
மத்திய பட்ஜெட்டை இது மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறிய தாவது: முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவது மற்றும் வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் பட்ஜெட் அறிவிப்புகள் உள்ளன. கடந்த 100 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவுக்கு உலகையே ஆட்டிப் படைக்கும் பெருந்தொற்றுகாலத்தில் வளர்ச் சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பட்ஜெட் வடிவமைக் கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
அதேசமயம் எதிர்க்கட்சிகள் இந்த பட்ஜெட்டை வெகுவாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இந்த பட்ஜெட்டை பூஜ்ய பட்ஜெட் என்று விமர்சித்துள்ளார்.
பங்குச் சந்தை ஏற்றம்
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேற்று பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று 848 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் 237 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கட்டமைப்பு மூலதன செல வினங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது பங்கு வர்த்த கத்தில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் தினத்தில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்ற, இறக்க நிலை காணப்படும். ஆனால் நேற்றைய தினம் பங்குச் சந்தை ஏறுமுகத்தைக் கண்டது. வர்த்தகம் முடிவில் 848 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 58,862 புள்ளிகளைத் தொட்டது. இதேபோல தேசிய பங்குச் சந்தையில் 237 புள்ளிகள் உயர்ந்ததில் குறியீட்டெண் 17,576 புள்ளி களானது.
ஆட்டோமொபைல், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவைச் சந்தித்தன. வங்கிகள், முதன்மை பொருள் நிறுவனங்கள், எப்எம்சிஜி, பார்மா, தகவல் தொழில்நுட்பம், ரியால்டி, உலோக நிறுவன பங்குகள் ஏற்றம் பெற்றன.
டாடா ஸ்டீல் (7.2%), சன் பார்மா (6.7%), இண்டஸ் இந்த் வங்கி (5.65%) பங்குகள் ஏற்றம் பெற்றன. இதே வரிசையில் எல் அண்ட் டி, அல்ட்ராடெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் கணிசமாக உயர்ந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT